பாமக பொதுக்குழு பஞ்சாயத்து.. விசாரணை நிறைவு! “உத்தரவு பிறப்பிக்காததால் தடையில்லை” - அன்புமணி தரப்பு
சென்னை: நாளை பாமக பொதுக்குழு நடத்துவதாக அன்புமணி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில் இருவரும் ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் தற்போது விசாரணை நிறைவடைந்துள்ளது. இன்னும் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாததால், பொதுக்குழு நடத்த தடையில்லை என அன்புமணி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன
பாமகவில் அன்புமணி வகித்து வந்த தலைவர் பதவியின், பதவிக்காலம் முடிந்துவிட்டது. இதனையடுத்து கட்சியின் தலைவர் நான்தான், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்குதான் உள்ளது, பொதுக்குழு கூட்டுவதற்கும் எனக்கே அதிகாரம் உள்ளது என்று கூறி வரும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ஆக.19ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவித்தார்.

ஆனால், அன்புமணி இதற்கு உடன்படவில்லை. மட்டுமல்லாது ஆக.9ம் தேதி, அதாவது நாளை பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தது. அன்புமணியின் அறிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு கோரியிருந்தது. வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக நீதிபதி அறிவித்தார்.
மாலை 5.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, என்னுடைய அழைப்பை ஏற்று வாருங்கள் என்று கூறியிருந்தார். அன்புமணி இதற்கு ஓகே சொன்ன நிலையில், ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராக விலக்கு கோரியிருந்தார். இருப்பினும் காணொலி வாயிலாக ஆஜரானால் ஏற்பதாக நீதிபதி கூறியுள்ளார். இப்படியாக இருவரும் ஆஜராகியிருந்தனர். இதனையடுத்து விசாரணை தற்போது முடிவுற்றிருக்கிறது.
ஆனால் நீதிமன்றம் வழக்கின் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே நாங்கள் பொதுக்குழு நடத்த ஆட்சேபனை இல்லை, நாளை திட்டமிட்டபடி போதுக்குழுவை நடத்தவோம் என்று அன்புமணி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியள்ளன.












Click it and Unblock the Notifications