சசிகலாவை ஜெயலலிதா விரட்டியடிக்க காரணமான 'பெங்களூர் சதி திட்டம்' குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமது போயஸ் கார்டன் பங்களாவில் இருந்து சசிகலாவை விரட்டியடிக்க காரணமாக இருந்த பெங்களூர் சதித் திட்டம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விவரித்துள்ளது.
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் சசிகலா குடும்பத்தின் பெங்களூர் சதித் திட்டம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா என்பது பதிவு செய்யப்பட்டது. ஜெ. ஜெயலலிதா, 1982-ம் ஆண்டு அரசியலுக்கு வந்தபோது அவர்களது நட்பு மலர்ந்தது. அப்போது டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதல்வராகவும் அதிமுகவின் தலைவராகவும் இருந்தார்.
ஜெயலலிதாவுடன் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா வசித்து வந்தார். ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பிறகு, போயஸ் கார்டன் இல்லம் அவரது முகாம் அலுவலகமாக இருந்தது. அவர் ஆட்சியில் இல்லாதபோதும் சசிகலா அவருடன் தொடர்ந்து வசித்து வந்தார்.

பெங்களூர் சதித் திட்டம்
2011-ம் ஆண்டு ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த போது, ஜெயலலிதா- சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. புலனாய்வு காவல்துறைத் தலைவர் கே.ராமானுஜம் கூறுகையில், டெகல்கா என்ற பத்திரிகையின் பெங்களூரு வெளியீட்டில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு ஹோட்டலில் சூழ்ச்சி செய்தனர்.

டெகல்கா இதழ் செய்தி
பெங்களூரு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து திட்டம் தீட்டினர்; கர்நாடக மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் டிஜிபி சங்கர் பிதாரி தகவல் அளித்து, ஒலி நாடாவுடன் வாய்ஸ் மெசேஜ் அதை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார் என கூறியிருந்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு அத்தகைய தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை என்றார். அது டெகல்கா இதழில் வெளியான செய்தி என தெரிவித்திருந்தார்.

கிருஷ்ணப்பிரியா வாக்குமூலம்
சசிகலா தமது வாக்குமூலத்தில், போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்தார்; அதனால் இளவரசியுடன் தி.நகரில் வசிக்க தொடங்கினேன் என்றார். இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, யாரோ அளித்த தவறான தகவலின் பேரில் சசிகலா, இளவரசி போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றார். மேலும் திவாகரன், ராவணன் செயல்பாடுகள் குறித்தும் கட்சியில் பதவி வகிப்பவர்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்களது குறைபாடுகள் பற்றி சசிகலாவிடம் தெரிவிப்பர்; சசிகலா, ஜெயலலிதாவிடம் தெரிவிப்பார் எனவும் சாட்சியத்தில் கிருஷ்ணப்பிரியா கூறியுள்ளார்.

ஏமாற்றப்பட்ட ஜெயலலிதா
அத்துடன், திவாகர், சசிகலா உறவினர் மற்றும் சிலர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டனர்; தம்மை சிலர் ஏமாற்றிவிட்டனர்; ஜெயலலிதா தம்மை சுற்றி தவறு நடப்பதாக தெரிவித்தார். அதனால் சசிகலா வெளியேறினார். ராமானுஜம் அளித்த உளவுத்துறை அறிக்கை மூலம் இது தெரியவந்தது. ஆகையால் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேறினார் எனவும் கிருஷ்ணப்பிரியா கூறினார்.












Click it and Unblock the Notifications