“சனாதன தர்மத்தை நெஞ்சில் வைத்திருக்க வேண்டும்..” நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சொன்னதை கவனிச்சீங்களா!
சென்னை: "எனக்கு இன்னும் நாலரை ஆண்டுகள் சேவை உள்ளது. இந்த நாலரை ஆண்டுகளில், நான் அற்புதம் படைக்க வேண்டும். சனாதன தர்மத்தை என் இதயத்தில் வைத்திருக்க வேண்டும்" என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியிருப்பது விவாதங்களை தூண்டியிருக்கிறது.
திருப்பரங்குன்றம் தீப வழக்கில், சுவாமிநாதன் கொடுத்த உத்தரவுகள்.. கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தன. சனாதனத்திற்கு எதிராக இருக்கும் திமுக, இடதுசாரிகள் மற்றும் விசிக தலைவர்கள் இந்த உத்தரவுகளை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளனர். சுவாமிநாதனின் முந்தைய தீர்ப்புகளையும் விமர்சித்திருக்கின்றனர்.

சனாதன தர்மம்
இப்படி இருக்கையில்தான் சனாதனம் குறித்து சுவாமிநாதன் பேசியிருக்கிறார். சென்னையில் தாரா அறக்கட்டளை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நீதிபதியாய் தனது எஞ்சிய பணிக்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்ததாகவும், தனிப்பட்ட விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட.. சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்க வேண்டிய கடமையை, இந்நிகழ்வு தனக்கு மீண்டும் அழுத்தமாக உணர்த்தியுள்ளதாகவும் கூறியிருந்தார்.
தொழில்சார் அறிவு மட்டும் பொது வாழ்க்கையில் ஒருவரது பங்கை அல்லது முழுமையான குணாதிசயத்தை வரையறுக்காது என்றும், இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ஒரு புதிய பார்வையையும், முன்னோக்கிய பொறுப்புணர்வையும் பெற்றுள்ளதாகவும் கூறியிருந்தார்.
விருதுகளை வழங்கிய நீதிபதி
விழாவில், நீதிபதி சுவாமிநாதன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமியுடன் இணைந்து, கலாச்சார மற்றும் ஆன்மீகப் பங்களிப்புக்கான விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்கள் வெறும் சாதனையாளர்கள் மட்டுமல்ல என்றும், பணிவும், சேவையுமே அவர்களிடையே பொதுவான அம்சங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஒன்று சேர்த்த இந்த நிகழ்வை அவர் அற்புதமானது என்று மனதாரப் பாராட்டினார்.
நிபுணத்துவம் அவசியம்
முன்னதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி குறிப்பிட்ட கருத்துக்களை, சுட்டிக்காட்டி பேசிய நீதிபதி சுவாமிநாதன், பாட அறிவு மற்றும் நிபுணத்துவம் அவசியம் என்றாலும், அவை மட்டுமே ஒரு முழுமையான ஆளுமையை வடிவமைக்கப் போதுமானவை அல்ல என்று தெரிவித்தார்.
"பாட அறிவும், பொது அறிவும் தேவைதான். அதுமட்டும் ஒரு நபரின் ஆளுமையை முழுமையாகக் கொண்டு வராது. நீங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் குணாதிசயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்," என்று சுவாமிநாதன் கூறியிருந்தார்.
இளையராஜாவின் பேரன்
இளையராஜாவின் பேரன் இந்த விழாவில் பங்கேற்றிருந்தார். இதனை குறிப்பிட்ட சுவாமிநாதன், "பெரும் குடும்பப் பாரம்பரியமும், புகழ்பெற்ற பின்னணியும் இருந்தபோதிலும், மற்றவர்களிடம் அவர் காட்டிய மரியாதை மற்றும் தற்பெருமை அற்ற குணம் அவரை உயர்த்தியுள்ளது. பொதுப் பதவியும், மக்கள் அங்கீகாரமும் தொழில்முறைத் திறனுக்கு அப்பாற்பட்டு, பணிவு, சேவை, மற்றும் உறுதியான அறநெறி அடித்தளத்தைக் கோருகின்றன என்பதை இத்தகைய நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications