தமிழக அரசின் மாநில உரிமைகளை பாதுகாக்கும் குழு தலைவர் பணிக்காக ஊதியம் வேண்டாம்- நீதிபதி குரியன் ஜோசப்
சென்னை: நாட்டின் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான உறவுகளைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் தலைவரான தாம், இந்த பணிக்காக ஊதியம் பெறமாட்டேன் என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 110-வது விதியின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலை குழு அமைக்கப்படுகிறது; இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் இடம் பெறுவர்; இந்த குழு ஜனவரி மாதத்துக்கும் அறிக்கை தாக்கல் செய்யும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக நீதிபதி குரியன் ஜோசப் கூறுகையில், தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி வரவேற்புக்குரியது. மத்திய- மாநில உறவுகள் குறித்து ஆராய அவ்வப்போது இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு தருவோம். இந்த குழுவின் தலைவராக செயல்படுவதற்காக நான் ஊதியம் பெறமாட்டேன் என்றார்.
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி குரியன் ஜோசப் குழுவானது, மத்திய மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்;
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்தல்;
மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்;
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்;
1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்தில்கொள்ளுதல் வேண்டும். இவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும் என தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications