கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3.50 லட்சம் மானியம்.. தூத்துக்குடி பயனாளிகளுக்கு என்ன நடந்தது?
சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் கிராமப்புற ஏழை குடும்பங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூ.3.50 லட்சம் வரை மானியத்துடன் கான்கிரீட் வீடு கட்டித்தரும் இந்த திட்டம், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு பெரிய உதவியாக இருந்து வருகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டிய சில குடும்பங்களுக்கு இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.. அது என்ன?
கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம்தான் "கலைஞரின் கனவு இல்லம்".

குடிசை அல்லது ஓட்டு வீடுகளில் வசிக்கும் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அரசு மானிய உதவியுடன் ஆர்சிசி கூரையுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. ஒரு வீட்டுக்கு சுமார் ரூ.3.50 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 360 சதுரஅடி பரப்பளவில், சமையல் அறையுடன் வீடு அமைக்கப்படுகிறது. இதில் 300 சதுரஅடி அளவுக்கு ஆர்சிசி கூரை அமைக்கப்படுவதுடன், மீதமுள்ள பகுதி பயனாளியின் விருப்பத்திற்கு ஏற்ப தீப்பற்றாத பொருட்களை பயன்படுத்தி அமைக்க அனுமதிக்கப்படுகிறது.
இன்டர்லாக் கற்கள், செங்கல், ஏஏசி பிளாக் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தலாம். கட்டுமான செலவை குறைக்கும் வகையில் அரசு சார்பில் சில தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், TANCEM மூலம் குறைந்த விலையில் சிமெண்ட், அரசு அனுமதித்த சப்ளையர்கள் மூலம் இரும்புக் கம்பிகள் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம்
வீடு கட்டுவதற்கு தேவையான நிலம், பட்டா உள்ளிட்ட அடிப்படை தகுதிகளை கொண்ட கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஏற்கனவே சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வணிகம் அல்லது வாடகைக்கு பயன்படுத்தும் நிலம் வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.
ரேஷன் கார்டு, ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, வருமானச் சான்றிதழ், பட்டா, சிட்டா, வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் விண்ணப்பத்துக்கு தேவைப்படும். பயனாளிகள் விரும்பினால், வீடு கட்டுவதற்காக வங்கிகள் மூலம் ரூ.1.50 லட்சம் வரை கடனும் பெறும் வாய்ப்பு உள்ளது.
இப்படி ஏழை குடும்பங்களுக்கு சொந்த வீட்டை உருவாக்கும் முக்கிய திட்டமாக கலைஞர் கனவு இல்லம் செயல்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதன் பயனாளிகள் தற்போது வேறு ஒரு சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிய ஏழை குடும்பங்கள் தற்போது நிதிச்சுமையில் சிக்கியிருக்கிறார்கள்..
2025-26-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் ஒரு பகுதியினருக்கு கட்டுமானத்துக்கான அரசு உதவி கிடைத்துள்ள நிலையில், மற்றொரு பகுதியினர் இன்னும் முழுமையான மானியத்தை பெறாமல் காத்திருக்கின்றனர். இதனால் வீடு கட்டும் பணிக்காக ஏற்கனவே செலவு செய்த தொகையை சமாளிக்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
வீடு கட்டுவதற்கான அரசு மானியம்
வீடு கட்டுவதற்கான அரசு மானியம் போதுமான காலத்தில் கிடைக்காத சூழலில், சில பயனாளிகள் வேறு வழியின்றி வெளியில் கடன் வாங்கி கட்டுமானத்தை முடித்துள்ளனர். தற்போதைய கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் சுமார் 300 சதுரஅடி வீடு கட்டுவதற்கே ரூ.9 லட்சம் வரை செலவாகும் நிலையில், அரசு வழங்க வேண்டிய தொகையை எதிர்பார்த்து அவர்கள் கடன் சுமையுடன் காத்திருக்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 450 பயனாளிகளுக்கு மானியத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.. இதனிடையே, நடப்பு ஆண்டில் மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்ட பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வீடுகளை கட்டி முடித்தும் அரசு உதவித்தொகை கிடைக்காத நிலை தொடர்வது பயனாளிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வீட்டில் நிம்மதியாக குடியேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கடன் வாங்கி கட்டுமானத்தை முடித்துள்ள நிலையில், மானியத்தை தாமதமின்றி விடுவித்து தங்களது கடன் சுமையை குறைக்க வேண்டும் என்பதே தூத்துக்குடி மாவட்ட பயனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
