அண்ணாமலைக்கு ரஃபேல் வாட்சை பரிசாக கொடுத்ததே செந்தில் பாலாஜிதான்.. பின்னணி.. அதிர வைத்த கல்யாணராமன்!
சென்னை: அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் புயலைக் கிளப்பி விட்டுள்ளார் கல்யாண் ராமன். அண்ணாமலைக்கு ரஃபேல் வாட்ச்சை கொடுத்ததே செந்தில் பாலாஜி தான் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அணிந்திருந்த ரஃபேல் வாட்ச், பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல்காந்தியின் ஆடை விலை குறித்து பாஜகவினர் கேள்வியெழுப்ப, பதிலுக்கு பிரதமர் மோடி அணியும் ஆடைகளின் விலையைப் பகிர்ந்து எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுத்தனர். அப்படியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் ஐந்து லட்சம் ரூபாய் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தீயாகப் பரவியது.

அண்ணாமலை ரஃபேல் வாட்ச்: அதற்கு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அண்ணாமலை, நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. உலகில் இந்த வகை வாட்ச் 500 மட்டும்தான் இருக்கிறது. அதனால், என் உடம்பில் உயிருள்ளவரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். நான் தேசியவாதி என்பதால் இதனை கட்டியுள்ளேன் என விளக்கம் கொடுத்தார்.
இதையடுத்து அப்போது அமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜி, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள Rafale watch-ஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்து எனச் சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாட்ச் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்துக்குள் வெளியிட முடியுமா... இல்லை வழக்கம்போல Excel Sheet ஏமாத்து வேலைதான் வருமா?" எனப் பதிவிட்டிருந்தார்.
செந்தில் பாலாஜி - அண்ணாமலை மோதல்: அதற்கு பதிலளிக்கும் விதமாக, மிக விரைவில் தனது ஒட்டுமொத்தச் சொத்து விவரத்தையும் வெளியிடுவேன் என பதிவிட்டிருந்தார் அண்ணாமலை. அதற்கு செந்தில் பாலாஜி, "தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்புமனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021-ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்துக்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? என கிண்டல் செய்திருந்தார்.

ஆனால், அப்போதும் ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிடாத அண்ணாமலை, நான் பாதயாத்திரை தொடங்கும்போது தனது சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிடுவேன், திமுகவினரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் எனக் கூறியிருந்தார்.
சேரலாதன் பெயரில் பில்: மேலும், சேரலாதன் என்பவர் பெயரில் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட்டார் அண்ணாமலை. ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்ச்சை நான் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் வாங்கினேன். இதனை கோவையைச் சேர்ந்த எனது நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன்" எனக் கூறினார்.
எனினும் ரஃபேல் வாட்ச் பில் தொடர்பாக திமுகவினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர். இதற்கிடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இதையடுத்து, அண்ணாமலை - செந்தில் பாலாஜி இடையேயான வார்த்தை மோதல்கள் ஒய்ந்திருந்தன.
மீண்டும் கிளப்பிய கல்யாண் ராமன்: இந்தநிலையில் தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த காரணத்தால் அக்கட்சியின் நிர்வாகி கல்யாண் ராமன் பாஜகவில் இருந்து ஓராண்டிற்கு நீக்கப்பட்டார். எனினும் கல்யாண் ராமன் தொடர்ச்சியாக அண்ணாமலைக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்.
இந்தநிலையில், கல்யாண்ராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அந்த Rafale 6 லட்சம் வாட்ச் 17-18 அதிமுக - டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏக்களை கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தனது உறவினராகிய அண்ணாமலை வைத்து நன்றாக கவனித்துக் கொண்டதற்காக செந்தில் பாலாஜியால் 2017ல் சுயமாக வழங்கப்பட்ட வெகுமதி. அதனால் தான் அந்த ஆளுக்கு அண்ணாமலையிடம் வாட்ச்சின் பில் இல்லை என்பதும் தெரியும். அதை தரமுடியாது என்பதும் தெரியும்.
கொடுத்ததே செந்தில் பாலாஜி தான்: கொடுத்தவரே கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் தயங்கிய அண்ணாமலை அடுத்தவன் கட்டி இருந்த வாட்ச்சை விலை கொடுத்து வாங்கியதாக பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பதில் சொல்ல 100 நாட்கள் ஆனதன் ரகசியம் இதுதான். மொத்தத்தில் நான் ஒரு கிளீன் ஆபிசர் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தது எல்லாம் பொய்.
(பொதுவாக எந்த மடையனும் 2016ல் விற்று தீர்ந்துவிட்ட ஒரு வாட்ச்சை தேடி, அதை 2021ல் அதுவும் உடலுடன் ஒட்டி உறவாடும் ஒரு பொருளை second hand பொருளாக வாங்கமாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும். தான் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக கற்பனை செய்து கொள்ளும் முட்டாளுக்குத் தெரியாது) என கல்யாண ராமன் தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications