“ஏற்கனவே 2”: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலையோ, பாலியல் கொடுமையோ இல்ல! ஆனால்.. தமிழக அரசு பரபர வாதம்
சென்னை: கள்ளக்குறிச்சிக்கு பள்ளி மாணவி கொலையோ, பாலியல் வன்கொடுமையோ செய்யப்படவில்லை என்றும், அப்படி ஒரு நிகழ்வு நடந்து இருந்தால் கொலை வழக்காக போலீஸ் மாற்ற தயங்காது என்றும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி கடலூரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

வன்முறை
பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. இதனால் பள்ளி அமைந்துள்ள கனியாமூர் பகுதியே கலவரமயமானது. இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. மாணவி மரண வழக்கு தமிழ்நாடு அரசால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

5 பேர் கைது
வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்த நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும் செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன் மனு
5 பேரும் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் அவர்கள் ஜாமீன் கோரி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு வாதம்
இந்த வழக்கில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், "முதலில் இது சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவானது. மாணவி எழுதிய தற்கொலை கடிதம் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டி இருக்கிறது. இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும்.

கொலை இல்லை
பள்ளியில் ஏற்கனவே 2 தற்கொலைகள் நடந்து இருக்கின்றன. ஏற்கனவே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் முரண்பாடுகள் இல்லை என்று ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது. இது பாலியல் வன்கொடுமையோ, கொலையோ கிடையாது. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் கொலை வழக்கு பதிவு செய்யவும் அரசு தயங்காது.

நிபந்தனை ஜாமீன்
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், 2 ஆசிரியர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தவிட்டார். தாளாளர், செயலாலர், முதல்வர் மதுரையில் இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் இருவரும் சேலத்தில் இருக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications