வெடித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம்.. தலா ரூ1 லட்சம் அறிவித்த பாஜக- நாளை ஆர்ப்பாட்டம்!
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு தழுவிய அளவில் பாஜக நாளை போராட்டம் நடத்துகிறது. கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஐ எட்டியுள்ளது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும் 130-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது தமிழ்நாடு அரசு.

இதனிடையே கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச் சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராக தொடர தனக்குத் தார்மிக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, தமிழகத்தையே அதிர்ச்சியிலும் வேதனையிலும் தள்ளியிருக்கிறது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச்சாராய இறப்புகள். மகனை இழந்துள்ள பெற்றோர், கணவனை இழந்துள்ள பெண்கள், தந்தையை இழந்துள்ள குழந்தைகள் என, கள்ளக்குறிச்சியில் கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்தினருக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தத் துயரத்தில் இருந்து மீண்டு வர அனைவருடனும் தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவாக நலம்பெற, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பாக, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் சம்பத் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் அருள் ஆகியோரின் முன்னேற்பாட்டில், வீடற்றவர்களுக்கு வீடு, குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட மத்திய அரசின் நலத்திட்டங்களில், இந்த குடும்பத்தினர் பலனடையும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முழுக்க முழுக்க திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் நடந்துள்ள இந்த துயர சம்பவத்தில், அதிகாரிகள் மீது மட்டும் பழி போட்டு, பிரச்சினையை மூடி மறைத்து விடலாம் என்ற எண்ணத்தில் திமுக இருந்தால், அதைப் பார்த்துக் கொண்டு தமிழக பாஜக சும்மா இருக்காது என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications