நீட் அநீதியான தேர்வு.. மேடைகளில் முழங்கிய அரசியல்வாதிகள்.. கமல் கேட்ட சுளீர் கேள்வி
சென்னை: ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?! என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடக்கிறது.

தமிழில் தேர்வு
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ் உள்பட 13 மொழிகளில் இன்று நடக்கிறது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது

சென்னையில் அதிகம்
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை எழுத, 1,10,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 40,376 மாணவர்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளார்கள். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இருந்து 17,992 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் இருந்து 15,067 பேர் விண்ணப்பித்துள்ளனர். கோவை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் கணிசமானோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது,. கொரோனா காரணமாகத் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

நீட்டுக்கு எதிராக தீர்மானம்
வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கே உரிய வழக்கமான மற்றும் கடுமையான பரிசோதனைகள் இருந்தது. இந்நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், நாளை அதாவது திங்கள் அன்று நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஒப்புதல் அளிப்பாரா
இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நீட் தேர்வு அடுத்த ஆண்டில் இல்லாமல் போகும். ஆனால் அதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்பதே எதார்த்தமான உண்மை. ஏனெனில் மத்திய அரசு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இங்கு நீட் தேர்வு நடைபெறாமல் போகும். அதாவது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள தீரமானத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும். அப்போது தான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார். அப்படி மத்திய அரசு ஏற்காவிட்டால் நீட் தேர்வு ரத்து என்பது சாத்தியமே இல்லை. அதேநேரம் நீட் தேர்வுக்கு வலிமையான எதர்ப்பை தமிழக சட்டசபை பதிவு செய்வதாக மட்டுமே சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அமையும் என்பதே உண்மை என்கிறார்கள் கல்வியாளர்கள்.

அநீதியான தேர்வு
இதனிடையே ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?! என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications