காமராஜரின் முதல் தோல்வி.. அண்ணாவின் கடைசி வெற்றி.. மறக்க முடியாத 1967 சட்டசபை தேர்தல்!
சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக 1967 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்தத் தேர்தலில்தான் மாபெரும் அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்தன. திமுகவின் ஆட்சியை 6 மாத காலம் காமராஜர் விமர்சிக்கவே இல்லை.
திமுக முதன் முறையாக 1967 ஆட்சியைப் பிடித்தது. அண்ணாதுரை முதல் அமைச்சராகப் பதவியேற்றார். இந்தியாவிலேயே காங்கிரஸ் அல்லாத ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைத்தது தமிழ்நாட்டில்தான் என்று திமுக உடன்பிறப்புகள் ஒரு வரலாறு கூறுவார்கள். அது உண்மையில்லை. திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த அதே ஆண்டில்தான் பஞ்சாபில் சீக்கிய மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இயங்கிவந்து அகாலி தளம் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதுவும் மாநிலக் கட்சிதான்.

திமுக வெற்றி; காங்கிரஸ் தோல்வி:
1962இல் தமிழக சட்டசபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 206 ஆக இருந்தது. அதே 1967 தேர்தல் இதன் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது. இந்தத் தேர்தலில் உறுப்பினர்களின் வளர்ச்சி மட்டும் அதிகரிக்கவில்லை. திமுக வளர்ச்சி ரேகையும் செங்குத்துப் பாதையில் மேல்நோக்கி உயர்ந்து இருந்தது. 1962 தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. அதே 1967இல் 137 இடங்களில் வென்றது. திமுக கூட்டணியிலிருந்த சுதந்திராக் கட்சி, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் எனப் பல கட்சிகள் இருந்தன. ஆகவே அவர்களால் 179 தொகுதிகளைப் பிடிக்க முடிந்தது.
1962இல் திமுக 50 சீட்டுகளைப் பெற்றிருந்தது. அதில் ஒரு சீட் அதிகரித்து 51 இடங்களைக் காங்கிரஸ் 1967இல் பிடித்தது. இது காங்கிரசுக்கு மாபெரும் வீழ்ச்சி. ஆனாலும், அக்கட்சி தனித்தே தேர்தலை எதிர்கொண்டது. கூட்டணி பலத்தோடு திமுக ஆட்சியை முதன்முறையாகப் பிடித்தது.
1962 தேர்தல் முடிந்து ஆட்சி வந்ததும் ஒரே ஆண்டில் 'கே பிளான்' என்ற ஒரு திட்டத்தை காமராஜ் முன்மொழிந்து தன் அதிகாரப் பதிவிலிருந்து விலகி, அவர் கட்சிக்குப் பணிக்குத் திரும்பினார். அது காங்கிரஸை வளர்க்க என அவர் கூறினார். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருந்தால் நேரடியாக முதலாளிகளிடம் நிதி நிதி திரட்ட முடியாது. அப்படிக் கேட்டால் அதிகார துஷ்பிரயோகமாகிவிடும். அதை மறைக்கவே கட்சிப் பதவிக்குச் சென்று செல்வந்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தலாம் என காமராஜ் கனவு காண்கிறார் என்றன.
மேலும், எளிய தொண்டன் எனக் கூறிக்கொள்ளும் காமராஜர் சுக வாழ்க்கை நடத்துகிறார். ஏசியில்தான் வசிக்கிறார். பணக்காரர்களின் நண்பர்களாகவே அவர் செயல்படுகிறார் என திமுக, சுதந்திராக் கட்சி உட்படப் பல அவரைப் பற்றி விமர்சனங்களை வாரி இரைத்தன. அதன் விளைவும் பக்தவத்சலம் மாநில மக்களின் மனநிலைக்கு மாறாக எடுத்த முடிவுகளும் காங்கிரஸ் ஆட்சியை 67இல் முடிவுக்குக் கொண்டுவந்தன.
ராஜாஜி செய்த பிரார்த்தனை:
"இந்தியா முழுவதும் நடக்கும் காங்கிரஸ் ஆட்சியால் நாடே திறந்தவெளி சிறைக்கூடமாக இருக்கிறது" என்று ராஜாஜி 1962 தொடங்கி பிரச்சாரம் செய்தார். ஹிந்தி எதிர்ப்பை முன்வைத்து திமுக மாநில மக்களின் ஆதரவை அதிகமாகச் சம்பாதித்திருந்தது. பக்தவத்சலம் நடத்திய கைது படலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கி இருந்தது. ஆகவேதான், அவர் திமுக ஆட்சிக்கு 1967இல் வரப்போகிறது என்று உணர்ந்ததால், ஹிந்தி போராட்டத்தில் போடப்பட்ட ஜிஓக்களை ரகசிய உத்தரவுப் போட்டு எரிக்கச் செய்தார்.
சி.என்.அண்ணாதுரையின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நெடுஞ்செழியன் பதவி வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறை மு.கருணாநிதிக்கும் கே.ஏ.மதியழகனுக்கு உணவுத் துறையும் செ.மாதவனுக்கு சட்டத்துறையும் சுகாதாரம் சாதிக் பாட்சாவுக்கும் பட்டியலின மக்கள் நலத்துறை சத்தியவாணி முத்துக்கும் ஒதுக்கப்பட்டன. சட்டசபைக்குத் தேர்வான திமுக உறுப்பினர் ஒருவர் ராஜாஜியிடம் வந்து, "உங்கள் கனவு பலித்துவிட்டது அல்லவா?" என்றார். அதற்கு அவர், "என் கனவல்ல. இறைவனிடம் நான் செய்து கொண்ட பிரார்த்தனை பலித்தது" என்றார். நடக்கக் கூடியதாக இருந்தால் கனவில் காணலாம். கனவிலும் நடக்க முடியாத நிலையைச் சாதிக்கக்கூடியது பிரார்த்தனை. இறைவன் அருள். இப்படி ராஜாஜி விளக்கம் தந்தார்.
கடவுள் நம்பிக்கைக் கொண்டவர் ராஜாஜி. கம்பராமாயணம் மீது அதைச் சிறப்பாகக் கரைத்துக் குடித்து எடுத்துரைத்து வந்த டி.கே.சி மீதும் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தவர் இவர். ஆனால், கம்பராமாயணத்தை விமர்சித்து காம ரசம் என எழுதியவர் அண்ணாதுரை. அவர் விமர்சித்து எழுதிய கட்டுரைகள் 'தீ பரவட்டும்' என்று புத்தகமாக வந்தது. தொடக்கத்தில் கடவுள் மறுப்பாளராக இருந்துவந்த அண்ணாதுரை திமுகவைத் தொடங்கியது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றார். கடவுள் பற்றி கேள்வி எழுப்பிய போது, 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்' என்றார்.
முன்னதாக பிராமணர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து வந்த அண்ணா, பின் பிராமணீயத்தை எதிர்க்கிறேன் என்றார். பிராமணர் என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் தன் கட்சியினரை 'மேட்டுக்குடி' எனக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தினார்.
இதே காலகட்டத்தில் 'பிராமணாள் ஹோட்டல்' என்ற பெயர்ப் பலகையை அழிக்கும் போராட்டத்தைக் கையில் எடுத்தார். திருவல்லிக்கேணியிலிருந்த 'முரலீஸ் பிராமணாள் கஃபே' பெயர்ப் பலகை அழிப்பு போராட்டத்தை முன்னெடுத்தார் பெரியார். கூடவே பிள்ளையார் சிலை உடைப்பு நடைபெற்றது. அது பற்றி அண்ணாதுரையிடம் கேட்டபோது, "பிள்ளையாருக்குத் தேங்காயையும் உடைக்கமாட்டேன். பிள்ளையார் சிலையையும் உடைக்கமாட்டேன்" என்றார். இந்த மாற்றங்கள்தான் ராஜாஜியை திமுக பக்கம் திசை திருப்பியது.
காமராஜின் முதல் தோல்வி
1962 தேர்தலில் சாத்தூர் தொகுதியில் நின்று காமராஜர் ஜெயித்தார், அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் தோற்றார். அதே 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜ் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அண்ணாதுரை தன் தொகுதியில் வென்றார். காமராஜ் நின்ற 'விருதுநகர்' ஒரு காலத்தில் நீதிக்கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டது. அதை அறிந்து போட்டியிட்டார் காமராஜ். அவரது முதலும் கடைசி தோல்வியும் இதுதான். அண்ணாதுரையின் கடைசி வெற்றியும் இதுதான்.
இந்தத் தேர்தலில் காமராஜ் தோற்றுவிடக்கூடாது என்று அண்ணாதுரை நினைத்ததாகவும் அனுபவம் உள்ள ஒரு தலைவர் சட்டசபைக்குள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் அண்ணாதுரை ஆசைப்பட்டதாக தன் 'நினைவலைகளில்'ல் இராம. அரங்கண்ணல் சுட்டிக்காட்டி இருக்கிறார். எதிரிகள் இடத்தில் கூட அண்ணா கைபிடித்த அரசியல் மாண்பு பலரை வியக்கச் செய்தது. அதற்காகவே அவர் பலரால் பாராட்டப்பட்டார்.
இந்தத் தேர்தலில் ஈ.வெ.ராமசாமி காங்கிரசையும் காமராஜையும் ஆதரித்தார். ராஜாஜி திமுகவை ஆதரித்து காமராஜையும் பெரியாரையும் எதிர்த்தார். ஆனால், வென்ற பின்னர் தன் ஆட்சியை ஈ.வெ.ரா.வுக்கு சமர்ப்பணம் செய்தார் அண்ணாதுரை.
திமுகவின் ஆட்சியை 6 மாத காலம் காமராஜ் விமர்சிக்கவே இல்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்த காமராஜ் சகாப்தம் முடிவுக்கு வந்ததுடன் காங்கிரஸ் என்ற தனிப்பெரும் கட்சி இவரது ஆளுமைக்குப் பின் தமிழ்நாட்டில் அடையாளம் தெரியாமல் கரைந்து போனது.
- எழுதியவர் கடற்கரய்
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ!












Click it and Unblock the Notifications