காதை கிழித்த கங்குவா.. ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி தெரியுமா? பலே வேலை செய்த சிறுத்தை சிவா!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் ஆஸ்கர் பட்டியலில் கங்குவா திரைப்படம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதனை சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். உண்மையில் ஆஸ்கார் தேர்வு பட்டியலில் கங்குவா இடம் பெற்றது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி சுமார் 10 ஆயிரம் திரைகளில் வெளியானது.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்த கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திசா பதாணி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன், கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்தனர்.
கங்குவா:
சுமார் 300 கோடி பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருந்தார். இதுவரை தயாரான படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட சூர்யாவின் படம் என்றால் அது கங்குவா தான். முன்னதாக அக்டோபர் மாதமே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் காரணமாக பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
ரசிகர்கள் கடும் அதிருப்தி:
இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் நவம்பர் 14ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளை ஞானவேல் ராஜா, சூர்யா மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக சூர்யா இந்தியா முழுவதும் பயணம் செய்து ரசிகர்களை சந்தித்து படத்துக்கு புரமோஷன் செய்தார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல் ராஜா பேசும்போது 2000 கோடி ரூபாய் கலெக்ஷனை எதிர்பார்க்கிறோம். 2000 கோடி நிச்சயம் வசூல் செய்யும்.
கடும் விமர்சனம்:
டிசம்பர் மாதமே படத்துக்கான வெற்றி விழா நடக்கும். தற்போது வைத்திருக்கும் பாஸை நீங்கள் வெற்றி விழாவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என பேசி இருந்தார். இந்நிலையில் 3டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் வெளியான நிலையில் முதல் நாளிலேயே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது. படத்தில் லாஜிக்கலாக எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை, படத்தில் சத்தம் அதிகம் இருக்கிறது, காது கேட்கவில்லை, கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
வன்மம்:
பல கட்சிகளும், குறிப்பிட்ட சில சமுதாய மக்களும் படத்தை கடுமையாக விமர்சித்த நிலையில், சிலர் படம் நன்றாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். பேண்டஸி திரைப்படம் குழந்தைகளுக்கும் குடும்பத்தில் இருக்கும் பிடிக்கும் என சில பாசிட்டிவ் விமர்சனங்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் படம் தொடர்பாக வேண்டும் என்றே வன்மம் பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகாவும் வேதனையுடன் கூறியிருந்தார்.
ஆஸ்கர் விருது:
தொடர்ந்து ஓடிடியில் வெளியான போதும் கங்குவா நல்ல பெயரை எடுக்கவில்லை. ஒரு சிலர் படத்தில் தொழில்நுட்பம் நன்றாக இருக்கிறது என கூறி வருகின்றனர். இந்த நிலையில் கங்குவா 97வது ஆஸ்கர் விருதுக்கான முதற்கட்ட பட்டியலில் தேர்வாகி இருக்கிறது. கடுமையான விமர்சனங்களை சந்தித்த கங்குவா ஆஸ்கர் விருது பட்டியல் வரை சென்றது எப்படி? என பலரும் அதனை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் மட்டுமில்லாமல் பட குழுவினர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்கள் படங்களை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..
எப்படி இடம் பெற்றது?:
ஆஸ்கர் நிர்ணய கட்டணத்தை செலுத்த வேண்டும், அமெரிக்காவில் 50 திரையரங்குகளில் 7 நாட்களாவது ஓடி இருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில் அதனை பூர்த்தி செய்யும் படங்களை விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படித்தான் ஆர்ஆர்ஆர் படம் விண்ணப்பிக்கப்பட்டு நாட்டு பாடலுக்கு விருதும் கிடைத்தது. இந்த நிலையில் சிறந்த படத்திற்கான விருதுக்கு கங்குவா பட குழு விண்ணப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் தான் சிறுத்தை சிவா அறிவுறுத்தலில் பேரில் கங்குவாவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கப்பட்டு, ஆஸ்கருக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் 324 திரைப்படங்களில் ஒன்றாக இந்த படம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் சூர்யா:
மேலும் பிரித்விராஜின் கோட் லைஃப், ஹிந்தியில் சந்தோஷ் உள்ளிட்ட சில படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. 12ஆம் தேதியிலிருந்து 5 நாட்களுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 17ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். ஏற்கனவே சூர்யாவின் ஜெய்பீம், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் முதற்கட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இறுதி பட்டியலில் அவை நுழையவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications