“தென்னகத்தின் எஃகு மனிதர் முதல்வர் ஸ்டாலின் ”.. விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் கனிமொழி பேச்சு!
சென்னை: "உழைப்பையே வாழ்க்கையாக்கி வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென் இந்தியாவின் எஃகு மனிதர் என தலைவர்களால் புகழப்படுபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் துணை பொதுச் செயலாளர் கனிமொழி பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான திமுக இளைஞரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மாநாட்டுக்கு வருகை தந்தார். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் துணை பொதுச் செயலாளர் கனிமொழி பேசுகையில், "உழைப்பு என்றாலும், உறுதி என்றாலும் இவர்தான். பாசிச சக்திகளை எதிர்க்கும் உறுதிமிக்க ஒரே தலைவன் நமது கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். உழைப்பையே வாழ்க்கையாக்கி வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தென் தமிழகத்தின் எஃகு மனிதர் என தலைவர்களால் புகழப்படுபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாசிச சக்திகளை எதிர்க்கும் உறுதிமிக்க ஒரே தலைவன் நமது கழக தலைவர் முதலமைச்சர் தான். யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென்று பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவாகத் தெரியும். முதல்வருடன் பெண்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள்.
இந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கும்போது, கழக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்லத் தோன்றவில்லை. "வெற்றி நமது" என்பதை அவர் உறுதி செய்துவிட்டார் என்று பாராட்டவே வேண்டும்.
திமுக வெற்றியை உறுதி செய்யும் மாநாட்டை உதயநிதி நடத்திக்கொண்டிருக்கிறார். துரோகத்தோடு கைகோர்த்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. அதிமுக அல்ல பாஜக தலைமையிலான கூட்டணி. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள துரோகத்தோடு கூட்டணி வைத்துள்ளனர். தேர்தல் வருகிறது என்றாலும் தமிழ்நாட்டுக்கு அள்ளி அல்ல கிள்ளிகூட கொடுக்க மாட்டேன் என ஒரு கூட்டணி.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நிதி கொடுக்க மாட்டேன் என்று கூறும் துரோக கூட்டணியோடு அதிமுக கைகோர்த்துள்ளது. உத்தர பிரதேசம், மராட்டியம், குஜராத்துக்கு அள்ளிக் கொடுக்கும் பாஜக, தமிழ்நாட்டுக்கு கிள்ளிகூட கொடுப்பதில்லை. துரோகத்தோடுதான் கைகோர்த்து ஒரு கூட்டணி நமக்கு எதிராக இருக்கிறது.
டிரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்த மாற்றத்தைக் கொண்டு வருவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் நாம் அனுப்பக்கூடிய பொருள்களுக்கு அமெரிக்காவில் 18% வரி, அங்கிருந்து வரக்கூடிய பொருள்களுக்கு வரியே கிடையாது. இது எதற்கும் பிரதமர் மோடி பதில் சொல்லமாட்டார்.
குடியரசுத் தலைவர் உரையில் வழக்கமாக பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர் வரவே இல்லை. ஏனென்றால் அங்கு வைக்கப்பட்ட கேள்வி. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications