கனிமொழி கையில் 28 சீட் லிஸ்ட்.. காங்கிரஸை அதிரவிட்ட ஸ்டாலினின் "மெசேஜ்".. டெல்லியின் பச்சை சிக்னல்?
சென்னை: தேர்தல் நெருங்கி வருகிறது.. ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே "ஆட்சியில் பங்கு" என்ற விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்தியா டுடே வட்டமேசை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் மற்றும் அதற்கு அடுத்தபடியாக நடந்து வரும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா டுடே மாநாட்டில் ஸ்டாலின் பேசியபோது, "தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும். காங்கிரஸுக்கும் தெரியும். அது இடையில் சில பேர் கிளப்பிவிடும் பிரச்சனை.

கூட்டணியில் ஏதேனும் முறைப்பு ஏற்படுமா? என்று திட்டமிட்டு சதி செய்கிறார்கள். அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை. ராகுல் காந்தியும் கவலைப்படவில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், ராகுல் காந்தி உடனான உறவு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "ராகுலை பொறுத்தவரைக்கும் அரசியலை தாண்டி, ஒரு மூத்த சகோதரராக என்னை பார்க்கிறார். நானும் அவரை சகோதரராகத்தான் பார்க்கிறேன். அரசியலை தாண்டி சொல்கிறேன். குடும்பத்தில் ஒருவர் போன்று என்னை அவர் கருதுகிறார். நானும் அப்படிதான் கருதுகிறேன்" என நெகிழ்ச்சியாக கூறியிருந்தது பலரது கவனத்தை பெற்றிருந்தது..
திமுக காங்கிரஸ் கூட்டணி
முதல்வர் இவ்வளவு வெளிப்படையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பேசிய பிறகும்கூட, காங்கிரஸ் தரப்பில் இருந்து வந்த எதிர்வினைகள் திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தவறாக இருக்கலாம்" எனப் பதிவிட்டது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்தது.
அதேபோல், ராகுல் காந்தியின் நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, "போலியான தனித்துவம் என்ற பெயரில் ஏன் ஒளிய வேண்டும்?" என திமுகவின் நிலைப்பாட்டை விமர்சித்தது கூட்டணியில் விரிசலை உறுதிப்படுத்துவது போல் இருந்தது.
கனிமொழி - செல்வப்பெருந்தகை
இவர்கள் இப்படி பேசுவதைவிட, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் அமைதி காப்பதுதான் முதல்வர் ஸ்டாலினை அதிக அதிருப்திக்கு ஆளாக்கிவிட்டதாம்..
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நேரில் அழைத்து, "உங்க ஆட்கள் இப்படிப் பேசுகிறார்களே, மேலிடம் ஏன் இதைக் கண்டிக்கவில்லை?" என்றுகூட ஸ்டாலின் கேட்டாராம்..
28 டூ 30 சீட்
இதன் தொடர்ச்சியாக, திமுகவின் நிலைப்பாட்டை ராகுல் காந்தியிடம் தெளிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்றும், அதில் எம்பி கனிமொழி முக்கிய பங்காற்ற வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
அதாவது "ஆட்சியில் பங்கு இல்லை" என்ற திமுக நிலைப்பாடு தொடரும் என்றும், காங்கிரஸுக்கு 28 முதல் 30 தொகுதிகள் வரை வழங்கும் முன்மொழிவு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது..
இதற்கு நடுவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒருபுறம் திமுகவுடன் இணக்கமாக இருப்பது போலப் பேசினாலும், 1967-க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாத ஆதங்கத்தையும், 2006-ல் ஆட்சியில் பங்கு பெறாமல் விட்டது தவறு என்பதையும் அடிக்கடி பேட்டிகளில் கோடிட்டுக் காட்டுகிறார்.
ராகுல் காந்தி முடிவு?
மறுபுறம், விசிக தலைவர் திருமாவளவன், "திமுக கூட்டணி மிகவும் வலிமையானது" என்று சொன்னாலும, "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கை அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ள ஜனநாயக உரிமை என்பதை மறுக்கவில்லை.
இப்போது பந்து ராகுல் காந்தியின் வசம் உள்ளது... எினனு்ம, கனிமொழி - ராகுல் சந்திப்பிற்கு பிறகுதான், காங்கிரஸ் இந்த நெருக்கடியை தணிக்குமா அல்லது தனி வழி தேடுமா என்பது தெரியவரும். அதுவரை தமிழக அரசியலில் ஒருவித குழப்பமும், சலசலப்பும் நீடிக்கவே செய்யும் என தெரிகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications