சென்னையில் இன்று அதிமுக மா.செ.க்கள் கூட்டம்- கர்நாடகா, லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகா தேர்தல், லோக்சபா தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 7=ந் தேதி செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இது அதிமுகவில் சலசப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஒருவழியாக ஏப்ரல் 16-ந் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என நேற்று அறிவிப்பு வெளியானது. புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக முரளி அறிவிக்கப்பட்ட நிலையில் அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பேசுபொருளானது.

இதனிடையே சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில் கர்நாடகா தேர்தல், லோக்சபா தேர்தல் 2024 ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.











Click it and Unblock the Notifications