சீமானை இப்படி சொல்லிட்டாரே "பிரபலம்".. அதைவிடுங்க, சாமி கும்பிடறதுக்கும், சனாதனத்திற்கும் தொடர்புண்டா
சென்னை: சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு குறித்து, சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.. இதை பாஜகவும் உற்று கவனித்து பார்த்துள்ளது.
எம்பி தேர்தல் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தையும் கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறது.

இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும், மாநில சட்டமன்றங்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
உதயநிதி: மற்றொருபுறம், உதயநிதியின் சனாதன பேச்சு விஸ்வரூபமெடுத்துள்ளது.. "சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்... எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.. எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று உதயநிதி பேசியிருப்பது தலைநகரை அசைத்து பார்க்க வைத்து வருகிறது.
இந்த இரு பிரச்சனைகளுக்கு நடுவில், சீமான் - விஜயலட்சுமி விவகாரம் வெடித்து கிளம்பி உள்ளது.. இருவருமே மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள்.. விஜயலட்சுமியை திமுக தூண்டிவிடுகிறது என்று சீமான், பகீரை கிளப்பியுள்ளதால், அரசியல் ரீதியாகவும் இந்த தாக்கம் ஏற்பட்டு வருகிறது.
3 பிரச்சனைகள்: இப்படி 3 விதமான பிரச்சனைகள் தற்சமயம், தமிழகத்தில் பரபரத்து கொண்டிருக்க, இது குறித்தெல்லாம், சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.. காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார் கார்த்தி சிதம்பரம்.. அப்போது அவர் சொன்னதாவது:
"இந்தியாவில் அடிக்கடி தேர்தல் வந்தால் ஜனநாயகத்திற்கு நல்லது... ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி விபரீத முடிவுகள் எடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாரே தவிர சனாதனத்தை பின்பற்றுபவர்களை அவர் சொல்லவில்லை.. அவர் பேசியதை நான் கவனமாக கேட்டேன். அவர் பேசியதில் எந்த தவறும் கிடையாது.. அவரது கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்.
தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை சனாதன தர்மம் என்பது, சாதி அடிப்படையில், சமுதாயத்தை பிரித்து, உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற பிரித்து பார்க்கும் கொள்கையைதான் சனாதனம் என்று நாம் சொல்வோம்.. சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இந்த விஷயத்தில், உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் பற்றிய பேச்சை திரித்து திசை திருப்புவர்களை, நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
கூட்டணி: பாஜக தலைவர் அண்ணாமலையை, அவரது சிறு வயதில், கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு பெற்றோர்கள் கற்றுக்கொடுத்தார்களா அல்லது சனாதனத்தை பின்பற்ற வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்களா? சனாதனத்தை பின்பற்றலாம் என்றா அவர்கள் அழைத்து சென்றிருப்பார்கள்? கோவிலுக்கு செல்வதற்கும் சாமி கும்பிடுவதற்கும், சனாதனத்திற்கும் என்ன சம்பந்தம்? சனாதனத்திற்கும் சாமி கும்பிடுவதற்கும் சம்பந்தமில்லை.
வட நாட்டுக்காரர்கள் சொல்வதை எல்லாம் அண்ணாமலை, அப்படியே கேட்டுவிட்டு பேசுகிறார். மோடி தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும்.
சீமான் கொள்கைகள் இல்லாதவர்... தற்காலிக வாக்கு வங்கியை மட்டுமே வைத்திருக்கும் ஒரு அரசியல்வாதி.. நாம் தமிழர் கட்சியில் ஒருமுறை தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அடுத்த தேர்தலுக்கு அந்த கட்சியிலேயே இருக்க மாட்டார்கள்..அண்ணாமலையும், சீமானும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உள்ள ஒரு லட்சம் கோடி கடனை அடைக்க விவாதம் நடத்துவார்களா?
விற்பனை: தமிழகத்தில் கொலை, கொள்ளைகளுக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான நடவடிக்கையின் மூலம் தான் அதனை கட்டுப்படுத்த முடியும். போதை பொருள், கஞ்சா விற்பனை ஆகியவற்றை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications