கிரிக்கெட் வீரர்கள் பெயருக்கு பின்னாடி எதுக்கு ‘இது’? பிசிசிஐ-க்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை!
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயரில் உள்ள சாதி பின்னொட்டை கைவிட அறிவுறுத்த வேண்டும் என பிசிசிஐ-க்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ஜாதி, மத, வர்க்க வேற்றுமை கடந்து அனைத்து தரப்பு மக்களும் ரசித்துப் பார்க்கும் விளையாட்டாக இருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனினும், கிரிக்கெட்டிலும் சாதி தொடர்பான விவாதங்கள் அவ்வப்போது எழுகின்றன.

குறிப்பிட்ட பிரிவினரே இந்திய கிரிக்கெட் அணியில் காலங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், சாதி மத பேதமற்று ரசிக்கப்படும் கிரிக்கெட்டில் விளையாடும், வீரர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதி பின்னொட்டை சேர்த்திருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
தற்போது இந்திய அணியில் விளையாடும் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், சூர்ய குமார் யாதவ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலர் தங்களது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை அடையாளமாக வைத்துக் கொண்டுள்ளனர்.
The @BCCI must advise players donning the Indian colours to drop their caste names. @ICC
— Karti P Chidambaram (@KartiPC) November 5, 2023
கிரிக்கெட் வீரர்கள் சாதி பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் பயன்படுத்துவது இப்போதைய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மட்டுமல்ல, நீண்ட காலமாகவே புழக்கத்தில் உள்ளது. கிரிக்கெட் வீரர்களின் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பிசிசிஐ-க்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். கார்த்தி சிதம்பரம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பின்னால் இருக்கும் ஜாதிப் பெயர்களைக் கைவிடுமாறு பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும்" எனக் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications