இது லிஸ்ட்லயே இல்லையே.. "எம்பியாகும் கரு.பழனியப்பன்!" கேட்கவே நல்லா இருக்குல்ல.. சிவகங்கைக்கு குறி
சென்னை: ஜீ தமிழில் வெளியாகி வரும் தமிழா தமிழா எனும் விவாத நிகழ்ச்சியை நடத்தி வந்த கரு.பழனியப்பன், திமுக சார்பில் சிவகங்கை எம்பி தொகுதிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்களே உள்ளன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது.

இந்த நிலையில் திமுக அதே கூட்டணியுடன் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என தெரிகிறது. இந்த நிலையில் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகவுடன் மதிமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை நடத்தியுள்ளன.
இதில் கடந்த முறையை காட்டிலும் கூடுதல் இடங்களில் போட்டியிட திமுக தலைமையிடம் கூட்டணி கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அது போல் சில கட்சிகள் தொகுதியை மாற்றியும் கேட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சிவகங்கை மக்களவை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதற்கான கோரிக்கை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வைத்து சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். அதே வேளையில் இந்த முறை கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக் கூடாது என காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதை தங்களுக்கு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சிவகங்கை தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகிறார்கள். இந்த தொகுதியில் திமுகவே போட்டியிடும் பட்சத்தில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதியின் மகன் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணா சங்கீதா உள்ளிட்டோர் சீட்டை பெற முயன்று வருகிறார்கள்.
அதுபோல் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து செய்தித் தொடர்பு மாநில இணைச் செயலாளராக இருக்கும் ராஜீவ் காந்தியும் சிவகங்கை தொகுதியை குறி வைத்துக் கொண்டு காத்திருக்கிறார். இவர்களுக்கு நடுவே காரைக்குடியை சேர்ந்த திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பனும் சிவகங்கை தொகுதியை குறி வைத்துள்ளார்.
இவர் உதயநிதியுடன் நெருக்கமாக இருக்கிறார். அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கூட கரு பழனியப்பன் கரை வேட்டி கட்டாத திமுககாரர் என உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார். எனவே உதயநிதியுடனான நெருக்கத்தின் பேரில் சிவகங்கை தொகுதியில் கரு பழனியப்பன் சீட் வாங்க முயற்சிக்கலாம் என தெரிகிறது.
கரு பழனியப்பன் தமிழா தமிழா எனும் விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் திடீரென அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினார். அவர் பெரியாரிய கருத்துகளை முன் வைப்பவர். திராவிட சித்தாந்தங்களை பின்பற்றுபவர். திமுகவின் கொள்கைகளை ஆதரித்து பொது மேடைகளில் பேசுபவர். திமுக பிரச்சார பொதுக் கூட்டங்களிலும் இவரது பங்களிப்பு இருக்கும். சிறந்த இலக்கியவாதி.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பட்டூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதி காங்கிரஸ் கோட்டையாக உள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரம் 5 முறை இந்த தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
அது போல் சுதர்சன நாச்சியப்பன், மீண்டும் ப சிதம்பரம் என இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் நாதன் 4.75 லட்சம் வாக்குகளை பெற்று வென்றார். கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.
2014 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு போட்டியிட்ட துரை ராஜ் சுபா 2,46 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாவது இடம் பெற்றார். அந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட எச் ராஜா 1.33 லட்சம் வாக்குகளை பெற்றார். தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரமோ 1.04 லட்சம் வாக்குகளை பெற்று 4ஆவது இடத்தை பிடித்தார். எனவே திமுக கூட்டணி இணைந்து போட்டியிட்டால் சிவகங்கை தொகுதியை எளிதாக வெல்லலாம் என்பது திமுகவினரின் கணக்காக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தற்போதுதான் திமுக சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. எனவே யாருக்கு சீட் கிடைக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications