10,784 மருத்துவமனைகளைக் கட்டியவர் கருணாநிதி; சுகாதாரத்துறையில் இந்தியாவுக்கே முன்னோடி!
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில் கிட்டத்தட்ட 10,784 மருத்துவமனைகள் உருவாக்கப்படன. அதன் மூலம் தமிழ்நாட்டை இந்திய அளவில் தலைநகரமாக மாற்றிக் காட்டினார் இவர்.
திமுக ஆட்சி என்றால் பலரும் உடனடியாக சமூகநீதி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அரசு என ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. முதல்வர் ஸ்டாலின் கூட இதைச் சமூகநீதி ஆட்சி என்றே மேடைக்கு மேடை முன்வைத்துப் பேசுகிறார். தரவுகள் அடிப்படையில் பார்த்தால் சமூகநீதி என்பதை வெறும் ஜாதி, மத அடையாளத்திற்குள்ளாக திமுக அரசு சுருக்குக் கொண்டதில்லை.

குறிப்பாக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி ஆட்சியில் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவே பல விசயங்களில் பின் தங்கி இருந்த காலத்தில் முன்னோக்கு பல அடிகளைக் கருணாநிதி எடுத்து வைத்துள்ளார். அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
உறுப்பு தான திட்டம் என்றால் என்ன என்று விழிபிதுங்கிப் போய் இந்தியா இருந்த காலகட்டத்தில் முதல் விழிப்புணர்வைப் பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறியது. அதற்கு முதல் விதையைப் போட்டவர் மு கருணாநிதி. அவரது ஆட்சிக் காலத்தில்தான் இத்திட்டத்திற்கு உயிர் மூச்சு கொடுக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு அவர் இதனைச் செய்தார். முதல்வர் காப்பீட்டுத் திட்டம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்துகொள்ளலாம் என அவர் அறிவித்தார். அன்றைக்கு மு.கருணாநிதி இதைச் செயல்படுத்தியபோது பொதுமக்களிடம் இது குறித்த அறியாமைகள் நிறையவே இருந்தன.
ஒரு டாக்டர் தம்பதியின் மகன் ஹிதேந்திரன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 நாட்களுக்குப் பின் அவர் மூளைச்சாவு அடைந்தார். அன்றைக்கு மூளைச்சாவு என்ற வார்த்தையைக் கூட தமிழக மக்கள் உணர்ந்திருக்கவில்லை. ஹிதேந்திரன் பெற்றோர் உறுப்புதானம் செய்ய முடிவெடுத்தனர். மகனின் இதயத்தை ஒரு சிறுமிக்குப் பொருத்த ஒப்புதல் அளித்தனர். அந்தச் சிறுமி வளர்ந்து இன்று பெரியவராகிவிட்டார். இந்தச் சிகிச்சை 2008 ஆம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில் நடந்தது. அவர் கொண்டுவந்த ஒரு திட்டத்தின் மருத்துவ புரட்சியின் பலனைக் கருணாநிதி கண்கூடாகவே நேரில் பார்த்தார்
இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மு.கருணாநிதி அறிமுகம் செய்த போது பிற மாநிலத்திலிருந்து வந்து தமிழ்நாட்டில் உறுப்புதான அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார். முதன்முதலாக இந்தச் சிகிச்சை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்தது. அப்போது ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அன்றைக்கு 12 மணிநேரம் இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சையைச் செய்தவர் மருத்துவர் அமலோற்பவநாதன்.
இன்றைக்கு இந்தத் துறை ஆலமரம் போல் வளர்ச்சி கண்டுள்ளது. இன்றைக்கு ஈரல், இதயம், நுரையீரல் எனப் பல உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகின்றன. இந்த அறுவைச் சிகிச்சை தரமாகத் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது. உயிரிழப்புகள் இல்லாமல் பல தடுக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு உறுப்பு தான அறுவைச் சிகிச்சையில் தமிழ்நாடு 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் 9,655 உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் நடந்துள்ளன. 2022இல் 878 உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன
இவரது ஆட்சியில் செயல்வடிவம் பெற்றதுதான் 'உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'. இதில் ஒரு கோடியே 34 இலட்சம் குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டன. அதன்படி, 3 இலட்சத்து 3 ஆயிரத்து 328 ஏழைகளுக்கு சுமார் 781 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்ய வழி ஏற்படுத்தித் தந்தார் கருணாநிதி.

2006 முதல் 2011வரையான ஆட்சிக்காலத்தில் இவர் விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். 'வருமுன் காப்போம் திட்டம்' மறுபடியும் செயல்படுத்தப்பட்டு, அதனால் 18,742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 77 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் பயனடைந்தனர். '108 ஆம்புலன்ஸ்' திட்டத்தை இவர்தான் அறிமுகப்படுத்தினார். 445 நவீன வாகனங்களை அதற்காக வழங்கினார். பயிற்சி பெற்ற வல்லுநர்களை நியமித்து மருத்துவ உதவிகளைச் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார். இத்திட்டம் மூலம் இவரது ஆட்சியில் 8 லட்சத்திற்கும் மேலான மக்கள் பயனடைந்தனர். மேலும் 'விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' மூலம் அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை நான்கு ஆண்டுகள் வழங்கினார்.
இவரது ஆட்சியில் 1,421 ஆரம்பச் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையங்களிலும் 3 செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் செய்வதற்கு வழிவகை செய்து தரப்பட்டது. ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி திட்டம் மூலம் ஒவ்வொரு பெண்ணும் 6,000 ரூபாய் கர்ப்ப காலத்தில் வழங்கப்பட்டது. இதற்காக 1,389 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதியுதவி ஒதுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 25 லட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை கர்ப்பிணிகள் சுகவாழ்வு பெற்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை மருத்துவ தலைநகரமாக மாற்றும் வேண்டி உழைத்தவர் கருணாநிதி. இவரது ஆட்சியில் சுமார் 10,784 மருத்துவமனைகளை உருவாக்கினார். அதன் மூலம் பொது சுகாதாரத்துறையில் மகத்தான சாதனை செய்தார்.












Click it and Unblock the Notifications