நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி.. சாதனைகளை லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்..பெருமிதம்!
சென்னை: மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் உருவாக்கம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்கள் என நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கலைஞர் கருணாநிதி என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக கொண்டாட திமுக தலைமை திட்டமிட்டு உள்ளது நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிப்பதற்காக திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடுவது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் ஆதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்பாக அரசு சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:-
இஸ்லாமிய சமூகத்திற்காக 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது. நுழைவுத்தேர்வு ரத்து. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கியது. சேலம் உருக்கு ஆலை. சேலம் புதிய ரயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம். ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகிய திட்டங்கள் உருவகம்.

மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்கியது. ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகள் , மருத்துவ கல்லூரிகள் உருவாக்கியது. இப்படி நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் தான் கலைஞர் கருணாநிதி. அப்படிப்பட்ட கருணாநிதிக்கு தான் அரசு சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறோம்.
கருணாநிதியை பெருமைபடுத்தும் விழாவாக மட்டும் இல்லாமல் தமிழகத்திற்கு அவர் நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த விழாக்கள் அமைய வேண்டும். மாதம் தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்தலாம். பெரிய விழாக்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் இந்த விழாக்கள் நடத்த வேண்டும்.
நவீன ஊடகங்களை இதற்கு பயன்படுத்த வேண்டும். செய்தி மக்கள் தொடர்பு தூறை இதற்கு முக்கிய பங்காற்ற வேண்டும். அரசு நடத்துவதாக மட்டும் இல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் , பயன் அடைந்தவர்கள் இணைந்து கொண்டாடுவதாக அது அமைய வேண்டும். அமைச்சர்கள் கொடுத்த ஆலோசனைகளை வரிசைப்படுத்தி தொகுத்து பின்னர் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்படும்.
நூற்றாண்டு விழா தலைமைக் குழு, விழாக்குழு, மலர்க்குழு, கண்காட்சி குழு போன்ற குழுக்கள் அமைசர்களை உள்ளடக்கி உருவாக்கப்படும். இந்த குழுக்கள் தங்களுக்குள் அடிக்கடி கூடிப்பேசி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த கூட்டம் தொடக்க கூட்டம் தான். தொடர்ந்து நாம் பெசுவோம். இது குறித்து அரசாணை விரைவில் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications