Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணநாளில் காணாமல் போன மு.கருணாநிதி..2 மணி நேரத் தேடுதல் வேட்டை..வியக்கவைக்கும் ரியல் ஸ்டோரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தென்றலைத் தீண்டியது இல்லை நான்; தீயைத் தாண்டி இருக்கிறேன்" என வசனம் எழுதியவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. இந்த வசனம் திரைப்படத்துக்காக மட்டும் அவர் எழுதியதுபோல இல்லை. அப்படியே அவரது நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்.

அவரின் இளம் வயதில், வாழ்க்கை, போராட்டங்கள் நிறைந்த போர்க்களமாகவே காட்சி அளித்தது. அந்தக் கதைகள் இன்றைக்கு உள்ள இளம் தலைமுறை அறியாதது.

 Karunanidhis unforgettable protests

14 வயதில் மாணவனாக முதல் போராட்டம்:1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள். இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி ஆணை வெளியிட்டார்கள். அதையொட்டி முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அப்போது மு.கருணாநிதிக்கு 14 வயது.

திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தார். "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே" என்று முழக்கமிட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதுதான் இவரது முதல் போராட்டம்.

 Karunanidhis unforgettable protests

நாடகங்கள் மூலம் நடந்த பிரச்சாரம்:அடுத்து 1944ஆம் வருடம். சேலத்தில் பெரிய மாநாடு. அதில் அண்ணா கொண்டுவந்த 5 அம்சத் திட்டம் கட்சியினரால் ஏற்கப்பட்டது. நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மலர்ந்தது. அப்போதுதான் இளைஞர் மு.கருணாநிதிக்கு திருமணம் முடிந்திருந்தது. சரியாக ஒரு வாரம்கூட ஆகவில்லை. தன் இளம் மனைவியை விட்டுவிட்டு அவர் பொதுக்கூட்டங்கள் பேச ஊர்ஊராகச் சுற்றுப் பயணம் போனார்.

ஒரு பக்கம் 'முரசொலி' பத்திரிகை. மறுபக்கம் கட்சி பணி. இயக்கத்தின் கொள்கையைப் பேச ஒரே வழி பத்திரிகைதான். அதைக் கொண்டுவர வேண்டும் என்றால் பணம் தேவை. பணம் வேண்டும் என்றால் சம்பாதிக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும் என்றால் வேலைக்குப் போகவேண்டும். அதில், மு.கருணாநிதிக்கு உடன்பாடு இல்லை. முழு நேரமும் கட்சிக்குத்தான் என்பதில் உறுதியோடு இருந்தார்.

அப்படி என்றால் பணத்திற்கு வழி? நாடகத்தில் நடிப்பது. அப்படியே வசனம் எழுதுவது. இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பத்திரிகை நடத்துவது. இதுவே அவரது திட்டம்.

 Karunanidhis unforgettable protests

இந்த இக்கட்டான சூழலில்தான் மு.கருணாநிதியின் நாடகத்தை விலைக்கு வாங்க முன்வந்தார் ஆர்.வி. கோபால். கூடவே தனது சுற்றிவரும் நாடகக் குழுவில் அவருக்கு ஒரு இடமும் கொடுத்தார்.

நாடகம் போடுவதற்காக விழுப்புரம் சென்றார் மு.கருணாநிதி. ஒரே வேட்டி சட்டையோடு ஊரைவிட்டுப் புறப்பட்டார். மாற்று உடை இல்லை என்பதால் தினமும் ஒன்றையே துவைத்துக் கட்டும் நிலை. அசரவில்லை அவர்.

'திராவிட நாடகக் குழு' விழுப்புரத்தில் நாடகம் நடத்தியது. ஆனால், நாடகம் வெற்றியடையவில்லை. அதன்பின் புதுச்சேரிக்குப் பயணம். 'சாந்தா அல்லது பழனியப்பன்' நாடகம் போடப்பட்டது. மாபெரும் வெற்றி. 25 நாள்கள் விடாமல் மேடையேற்றப்பட்டது.

 Karunanidhis unforgettable protests

அதன் வழியே பிரபலமானார், மு.கருணாநிதி. திராவிடர் கழக மேடைகளில் பேச அழைப்பு அவரைத் தேடிவந்தது. போய்ப் பேசினார். ஒரு முறை காஞ்சி கல்யாண சுந்தரம் புதுச்சேரிக்கு சென்றார்.

தனது 'தொழிலாளர் மித்ர'னில் கட்டுரை எழுத, கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். சன்மானம், தினம் ஒரு டீ. மறுக்கவில்லை, மு.க.. கொள்ளையைப் பேச ஓர் ஊடகம் என ஏற்றுக்கொண்டார்.

மறு உயிர்பெற வேண்டி நடந்த போராட்டம்:'அந்தப் பேனா' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அடுத்து, 'காந்தி வைஸ்ராய் ஆனால், என்ன நிகழும்?' கட்டுரை. இரண்டும் காந்தியை குறிவைத்தது. காங்கிரஸ்காரர்கள் கொதித்தார்கள்.

 Karunanidhis unforgettable protests

பெரியார் தலைமையில் புதுவையில் மாபெரும் மாநாடு. அதற்கு கருணாநிதியும் ஒரு அமைப்பாளர். அண்ணா உரையாற்றினார். மாநாட்டை நடத்தவிடாமல் பெரிய கூச்சல். குழப்பம். ரகளை. அடிதடி. கட்சி கொடிக்கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டது. எல்லாம் காங்கிரஸ்காரர்கள் செய்தது. காரணம், கருணாநிதி எழுதிய கட்டுரை.

'விடாதே' என்ற கும்பல் கருணாநிதியை விரட்டியது. அவரைக் காப்பாற்ற திருவாரூர் ராஜகோபால் ஓடிவந்தார். ஆனாலும் விடவில்லை அந்தக் கும்பல். தலைதெறிக்க ஓடினார் கருணாநிதி. சந்துபொந்து என எங்கெங்கோ ஓடினார். இறுதியாக ஒரே ஒரு வீட்டில் மட்டும் கதவு திறந்திருந்தது. அதற்குள் புகுந்தார்.

 Karunanidhis unforgettable protests

கூடவே புகுந்த கும்பல் அவரை பலம் கொண்ட மட்டும் தாங்கியது. மயங்கிச் சரிந்தார் அவர். இறந்துவிட்டார் என நினைத்த கும்பல் அவரை சாக்கடையில் தூக்கி வீசிவிட்டுச் சென்றது. வாரியில் கிடந்த அவரை வாரி அணைத்தது ஒரு குடும்பம். பாதுகாப்பாக வைத்து மருத்துவம் பார்த்தது.

கடைசியில் அவரை விரோதிகள் அடையாளம் கண்டுபிடிக்காத அளவு லுங்கியும் குர்த்தாவும் கொடுத்து ஒரு முஸ்லிம் தோற்றத்தில் புதுச்சேரியில் தங்கி இருந்த பெரியாரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள். அவர் 'குடி அரசு'வில் வேலை செய்ய ஈரோட்டுக்கு கூட்டிச்சென்றார். 11 மாதம் அங்கே வேலை செய்தார் கருணாநிதி.

'பராசக்தி' படத்தில் 1952வாக்கில் 'ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்' எனப் பிற்காலத்தில் அவர் வசனம் எழுதியது, ஒரு காலத்தில் புதுச்சேரியில் உண்மையாகவே நடந்ததையே! இதுதான் அவர் வாழ்வில் நடந்த மிகப் பெரிய போராட்டம்.

 Karunanidhis unforgettable protests

காணாமல்போன மணமகன் மு. கருணாநிதி:கருணாநிதியின் முதல் மனைவி, உடல்நிலை சரியில்லாமல் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த கையோடு மறைந்துவிட்டார். அதன்பின் 1948 செப்டம்பர் 15 ஆம் நாள் தயாளு அம்மையாருடன் 2ஆவது திருமணம் உறுதியானது. அன்று அண்ணாவின் பிறந்தநாள். அது தற்செயலாக அமைந்தது.

திருமணத்திற்கு 800 ரூபாய் தேவை. நண்பர்கள் மூலம் 500 ரூபாய் கடன் பெற்றார். இதைக் கொண்டு திருமணத்தை முடிக்க பெற்றோரைக் கேட்டுக்கொண்டார். அண்ணா தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்யத் திட்டம்.

 Karunanidhis unforgettable protests

ஆனால், செப் 15 அன்று இந்தியை எதிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் முன்பாக போராட்டத்தை அறிவித்தார், அண்ணா. வட தமிழ்நாட்டில் அண்ணா தலைமை. ஆகவே அண்ணா திருமணத்துக்கு வருவதில் சிக்கல். ஆனால், அது பிரச்சினையாக இல்லை.

மணநாள் அன்று 2 மணிநேரமாக மணமகன் கருணாநிதியைக் காணவில்லை. அண்ணா அறிவித்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தங்களது திருவாரூர் பள்ளிக்கு முன் நடந்த போராட்டத்திற்குப் போய் விட்டார் இந்த மணமகன். அதன்பின் மணமகள் வீட்டார் அவரைத் தேடிப்பிடித்து அழைத்துவந்தது பெரிய கதை.

தமிழ்நாடு முழுவதும் 6 பேர் பலி; 72 பேர் காயம்:ராஜாஜியின் ஆட்சிக் காலம் அது. பிரிவினைவாதக் கட்சியாக திமுக பார்க்கப்பட்ட காலம். ஆகவே 'ஒரு கொசுவை நசுக்குவதைப் போல திமுகவை நசுக்குவேன்' என்று கர்ஜித்தார், ராஜாஜி. இவரது அரசை எதிர்த்து திமுக மும்முனைப் போராட்டத்தை அறிவித்தது.

ராஜாஜி அறிவித்த கல்வி முறையை 'குலக் கல்வி' என விமர்சித்தது, திமுக. அதைக் கைவிடுமாறு வற்புறுத்தியது. போராட்டக்காரர்களை ஆணவமாகப் பேசிய நேருவைக் கண்டிப்பது. டால்மியாபுரம் ரயில் நிலையத்திற்கு கல்லக்குடி எனத் தமிழில் பெயர் வைப்பது.

 Karunanidhis unforgettable protests

இந்த டால்மியாபுரம் போராட்டத்திற்குத் தலைமையேற்கும் பொறுப்பை மு.கருணாநிதியிடம் அளித்தார் அண்ணாதுரை. ஆகவே திருச்சியைத் தனது போராட்டத்தின் களமாக்கத் திட்டமிட்டார் கருணாநிதி. 1953 ஜூலை 15 ஆம் நாள் போராட்டத்திற்குத் தேதி குறிக்கப்பட்டது.

திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள மணல்மேடு, போராட்டத்திற்கான இடமாகக் குறிக்கப்பட்டது. மாலை 6 மணிக்குத் தொடங்கிய கூட்டம் நள்ளிரவு வரை நடைபெற்றது. ஜூலை 13 ஆம் நாள் அண்ணா, நெடுஞ்செழியன், என்.வி.நடராசன் என மூத்த தலைவர்களை முன்னெச்சரிக்கை கைது செய்யப்பட்டனர்.

ஆனால், காவல்துறை கண்களில் அகப்படாமல் 14 ஆம் தேதியே லால்குடி சென்று இறங்கினார் கருணாநிதி. அணி அணியாகத் தலைவர்கள் வந்தனர். முதல் அணிக்குக் கருணாநிதி தலைவர். 2ஆவது அணிக்கு இராம சுப்பையா. 3ஆவது அணிக்கு கண்ணதாசன் தலைவர்.

முதல் குழுவிலிருந்த கருணாநிதி, சக்தி, கஸ்தூரி ராஜ், குமாரவேல், குழந்தைவேல் ஆகிய 5 பேர் ரயில் இன்ஜின் முன்பாக தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தனர். 'ஏன்?' என்றது காவல்துறை. 'எமது கனவை நனவாக்க' என்று சட்டெனப் பதில் தந்தார் கருணாநிதி. மொத்தம் 31 பேர் 'கல்லக்குடி' காவல்நிலையத்தில் சின்ன அறையில் அடைக்கப்பட்டனர்.

பின் போராட்டக் களத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இருவர் பலியாகினர். மாநிலம் முழுவதும் 6 பேர் பலி. 72 பேருக்குக் கொடூரக் காயங்கள். 5 ஆயிரம் பேர் கைது. மாநிலம் முழுவதும் சிறைகள் நிரம்பி வழிந்தன. தனது போராட்டத்தால் தமிழகத்தையே நடுநடுங்கச் செய்த மு.கருணாநிதிக்கு அப்போது வயது 29.

 Karunanidhis unforgettable protests

பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் 62 நாள்கள்:இதற்குப் பின் 1957 அக்டோபர் 13-ம் நாள், இந்தி எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அதற்குத் தலைமையேற்ற கருணாநிதி, சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தியதால் நான்கு மாதங்கள் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தது 1965ஆம் ஆண்டு. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கருணாநிதியை, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த காங்கிரஸ் அரசு, அவரை பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைத்தது. 62 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு கலைஞர் விடுதலை செய்யப்பட்டார்.

"என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் கிடக்கும் பாளையங்கோட்டை தான் இனி நான் யாத்திரை செய்ய வேண்டிய புனித பூமி" என்று அறிஞர் அண்ணா சொன்னார்!

எம்.ஜி.ஆர் ஆட்சியில் 'நீதி கேட்டு நெடும்பயணம்':1982 ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலம். திருச்செந்தூர் முருகன் கோயில் அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளையின் திடீர் மரணம். இது பெரிய புயலைக் கிளப்பியது.

அப்போது திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி மதுரையிலிருந்து திருச்செந்தூர்வரை சுமார் 200 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டார். அவர் நடத்திய 'நீதி கேட்டு நெடும்பயணம்' தமிழக அரசியல் வட்டாரத்தை உலுக்கியது. ஆட்சிக்கட்டிலிலிருந்த எம்ஜிஆர் இதைச் சமாளிக்க முடியால் தவியாய்த் தவித்தார்.

இறந்தபின்பும் தொடர்ந்த போராட்டம்:ஆகஸ்ட் 2 ஆம் தேதி 2018 ஆண்டு மறைந்தார் மு.கருணாநிதி. அவரை அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய திமுக விரும்பியது. ஆனால், இடம் ஒதுக்க அ.தி.மு.க. அரசு மறுத்துவிட்டது. திமுகவினர் இடம் கேட்டு தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக ஊடகங்களில் #Marina4Kalaignar என்ற ஹேஷ்டெக் டிரெண்டிங் ஆனது. இதனிடையே இடம் ஒதுக்கக் கோரி, தி.மு.க தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மெரினாவில் இடம் தரச் சொல்லி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அவரின் மரணத்திற்குப் பின்னரும் போராட்டம் அவரைத் தொடர்ந்தது என்பது வரலாறு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+