ராஜாத்தி அம்மாளுக்கு செரிமானக் கோளாறு! உயர் சிகிச்சைக்காக ஜெர்மன் அழைத்துச் செல்கிறார் கனிமொழி!
சென்னை: ராஜாத்தி அம்மாளுக்கு செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருப்பதால் அதற்கான உயர் சிகிச்சை வழங்குவதற்காக ஜெர்மன் அழைத்துச் செல்கிறார் கனிமொழி எம்.பி.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு ராஜாத்தி அம்மாள் அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை சென்னையிலிருந்து ராஜாத்தி அம்மாளுடன் ஜெர்மன் புறப்பட்டுச் செல்லும் கனிமொழி, 10 நாட்களுக்கு அங்கிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜாத்தி அம்மாள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் செரிமானக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவஸ்தை பட்டு வருகிறார். திட உணவுகள் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் திரவ வகை உணவுகளையே அவர் உட்கொண்டு வருகிறாராம். காய்கறி சூப், பழச்சாறுகள், பால், போன்ற ஆகாரங்களை மட்டும் உட்கொண்டு வரும் ராஜாத்தி அம்மாளுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

ஜெர்மனில் சிகிச்சை
மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ சிகிச்சைக்காக கனிமொழி எம்.பி.யே தனது அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். இந்நிலையில் தற்போது அவருக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் ஜெர்மனில் உள்ள பிரபல மருத்துவர் ஒருவரிடம் ராஜாத்தி அம்மாளை அழைத்துச் சென்று சிகிச்சை வழங்க முடிவு செய்திருக்கிறார் கனிமொழி. இதற்காக நாளை தனது அம்மா ராஜாத்தி அம்மாள் மற்றும் மகனுடன் கனிமொழி ஜெர்மன் புறப்பட்டுச் செல்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயர் சிகிச்சை
இந்த தகவலை முறைப்படி திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினிடம் கனிமொழி ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் ஜெர்மனில் தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக பதிலுக்கு ஸ்டாலின் கூறியதாகவும் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். ஜெர்மன் செல்வதற்கு ராஜாத்தி அம்மாள் மிகுந்த தயக்கம் காட்டிய நிலையில் கனிமொழி தான் அவரை வலியுறுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து சம்மதிக்க வைத்துள்ளார்.

அம்மாவை கவனிக்க
திட உணவுகளை தவிர்த்து வருவதால் ராஜாத்தி அம்மாள் உடல்மெலிந்து காணப்படுவதோடு மிகுந்த சோர்வுடனும் காணப்படுகிறார். நாளை சென்னையிலிருந்து ராஜாத்தி அம்மாளுடன் ஜெர்மன் புறப்பட்டுச் செல்லும் கனிமொழி, அடுத்த 10 நாட்களுக்கு அங்கிருந்து தனது அம்மாவை கவனித்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications