கரூர் விவகாரம்.. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில்.. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த சென்னை ஐகோர்ட்!
சென்னை: கரூர் சம்பவத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கரூர் மாவட்ட எஸ்பியை குழுவில் இணைத்தும், கரூர் விவகாரம் தொடர்பான ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்கவும் அந்த மாவட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் சென்னை உயர்நீதிமன்றத்தில், அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழக்குக் கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி செந்தில் குமார், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்வாகும். இந்த சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த சம்பவத்தில் விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். நான் உத்தரவு பிறப்பிக்கிறேன். அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பை கூட தவெகவினர் பின்பற்றவில்லை. என்ன மாதிரியான கட்சி இது? கரூர் துயரத்திற்கு தவெக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அக்கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கரூர் பெருந்துயர சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. அந்த குழுவில் கரூர் மாவட்ட எஸ்பியை குழுவில் இணைத்தும், கரூர் விவகாரம் தொடர்பான ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்கவும் அந்த மாவட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி பொறுப்பில் இருந்து வரும் அஸ்ரா கார்க், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கை கவனித்து வருகிறார். இந்த சிறப்பு புலனாய்வுக் குழு கூட்டத்திற்கான அனுமதி கடிதம் தொடங்கி, தமிழக அரசின் நடவடிக்கை, தவெகவின் செயல்பாடுகள், கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?, காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications