கொஞ்சம் டிஸ்டர்ப்பா இருக்கேன்.. மக்கள் நம்ம பக்கம் இருக்காங்க.. ஆதவ் அர்ஜுனா சொன்ன வார்த்தை!
சென்னை: தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார். கரூர் பெருந்துயரம் காரணமாக கொஞ்சம் டிஸ்டர்ப்பாக இருப்பதாக கூறிய அவர், வழக்குப்பதிவு தொடர்பாக எந்த கவலையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திற்கு திமுகவே காரணம் என்று தவெகவினர் சோசியல் மீடியாவில் வதந்தியை பரப்பி வந்தனர். இதனையடுத்து வதந்தி பரப்பிய சிலரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இதன்பின் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இளைஞர்களுக்கு புரட்சி வர வேண்டும் என்றும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். ஏற்கனவே உணர்ச்சிப்பெருக்குடன் தவெகவினர் இருந்து வரும் சூழலில், ஆதவ் அர்ஜுனாவின் பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்தது.
இதற்கு சோசியல் மீடியாவில் கடுமையான கண்டனம் எழுந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா உடனடியாக ட்வீட்டை நீக்கிவிட்டார். அதற்குள் அவரின் பதிவு சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி பிரிவு 192ன் படி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு, 196(1)ன் படி வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள், 197 (1) (d)ன் படி இந்திய இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல், 353 (1) (b)ன் படி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தவறான தகவல்கள் அல்லது வதந்திகளை வெளியிடுவது.
அதேபோல் 353 (2)ன் படி பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவல் வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பிய போது, கரூர் பெருந்துயரம் காரணமாக கொஞ்சம் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.. வழக்குப்பதிவு பற்றி கவலையில்லை.. மக்கள் நம்பக்கம் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications