“4 பக்கமும் தவறுகள்.. எனக்கு ஒரு யோசனை தோன்றியது.. அதை தலைமை செயலரிடம் கூறியுள்ளேன்” - ப.சிதம்பரம்
சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது மேலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த இருவர் மரணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

விஜய்யின் வாகனம், பிரசாரம் நடைபெறும் இடத்திற்குள் நுழைந்தது. 100 அடி சாலையில் 60 அடி நீள பேருந்து நுழைந்த போது, சாலையின் இருபுறங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது விஜய் ரசிகர்கள் மரக்கிளைகளின் மீது ஏறியதால், அது முறிந்து விழுந்தது. அதே சமயம், விஜய்யை பார்ப்பதற்கும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால், கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில், மூச்சுத்திணறலால் பலர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருவதால், வேலுச்சாமி புரத்தில் தடயங்கள் சேதப்படாமல் இருக்க 60க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "கரூரில் நடந்த துயர நிகழ்வில் 40 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 14 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.
கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதுவே என்னுடைய கருத்து. ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன். அது யோசனைதான். இது போன்று பலர் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்திருப்பார்கள்.
எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் பொது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவர்களும் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும். கரூர் நிகழ்வைப் போன்று துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications