கரூர் சம்பவம்: மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டில் தவெக புதிய மனு!
சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், கரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
தவெக கூட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், விஜய்யின் பிரசார வாகனத்தில் தொண்டர்களின் இருசக்கர வாகனங்கள் மோதியது குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்றும், அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்யாதது ஏன்? எனவும் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். கரூரில் துயரம் நேர்ந்தபோது அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தவெகவினர் தலைமறைவானதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், கரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தவெக உறுப்பினரும், வழக்கறிஞருமான ஜி.கார்த்திபன் என்பவர் கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த கூட்டத்திற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை செய்யவில்லை. இதனால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது. மேலும், உரிய பாதுகாப்பு வழங்குவதில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், கரூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் தத்தமது கடமையைச் செய்யத் தவறி விட்டனர்.
அதிகாரிகள் தங்களின் பணியைச் செய்யத் தவறியது, கடமை தவறியது, பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டது தான் விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் முறையான திட்டமிடல் இல்லாததே விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
எனவே, கடமையைச் செய்ய தவறிய கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கரூர் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக, தமிழக அரசு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
