கரூர் துயரம்.. சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழுவில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் யார்! வெளியான விவரம்
சென்னை: கரூரில் கடந்த மாதம் விஜய் பிரச்சாரத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறார்கள். சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அந்தக் குழு இப்போது அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தமிழக கேடர் அதிகாரிகள் குறித்த தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் கரூரில் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்குத் திடீரெனக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தியாவில் அரசியல் பிரச்சாரத்தில் இந்தளவுக்கு மோசமான சம்பவம் இதற்கு முன்பு நடந்ததே இல்லை.

இந்தச் சம்பவம் குறித்து முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதே பல்வேறு தரப்பினரும் கரூர் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைக் கூற ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் தான் இது தொடர்பான வழக்கில், கரூர் சம்பவத்தை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இருப்பினும், தவெக தரப்பினரும் சிபிஐ விசாரணை கோரி வலியுறுத்தினர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.
கரூர் சம்பவத்தைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், அது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அஜய் ரஸ்தோகி தலைமையிலான இந்தக் குழுவில் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. அதேநேரம் அவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்பதையும் சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியிருந்தது. இந்தச் சூழலில் தான் அஜய் ரஸ்தோகி கண்காணிப்புக் குழு தொடர்பாக நேற்றிரவு முக்கிய அறிவிப்பு வெளியானது.
அதாவது அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழுவில் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் தமிழக ஐபிஎஸ் கேடர் அதிகாரிகள் சுமித் சரண் (சிபிஆர்பிஎப்), சோனல் வி.மிஸ்ரா (எல்லை பாதுகாப்புப் படை) ஆகியோர் இடம் பெறுகிறார்கள். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications