மத்திய அரசின் சூப்பர் பிளான்.. வட சென்னையில் 100 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. 3 மாதத்தில் ஆரம்பம்
சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் காசிமேடு மீன் பிடிதுறைமுகம் வேறலெவலில் மாறிவிடும். இந்த திட்டம் 2025ம் ஆண்டு ஜூன்மாதம் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் மீன் என்றாலே காசிமேடு துறைமுகம் தான் எல்லாருடைய நினைவுக்கு வரும். சென்னையின் மிகப்பெரிய மீன் பிடி துறைமுகம் அதுதான். காசிமேடு துறைமுகம் தான் வட சென்னையின் அடையாளங்களில் ஒன்று. மீனவ நகரமான சென்னைஇன்று ஐடி தொழிலும், ஆட்டோ மொபைல் துறையும் கொடி கட்டி பறந்தாலும், இதற்கு அடிப்படையே சென்னையில் உள்ள துறைமுகம் தான்.. சென்னையில் உள்ள துறைமுகங்களில் முக்கியமானது தான் காசிமேடு மீன் பிடி துறைமுகம். விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலை மோதும்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு மேம்பாட்டு பணிகளை உடனே செய்து மேம்படுத்த வேண்டும் என்று காசிமேடு மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேறப் போகிறது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் பணி இன்னும் 3 மாதங்களில் தொடங்குகிறது. மொத்தம் ரூ. 127 கோடி மதிப்பீட்டில் பணிகள்மேற்கொள்ளப்படஉள்ளது. தற்போத அங்கு 25 பணிகளை அடுத்த 3 மாதங்களில் மேற்கொள்வதற்காக மத்திய அரசு ரூ. 98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை துறைமுக அறக்கட்டளையின் தலைவர் சுனில் பாலிவால் இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், "மீன்பிடித் துறைமுக மேலாண்மைக் குழுவின் (FHMC) நிதியில் இருந்து மீதித் தொகை பெறப்பட உள்ளது. ஆறு பேக்கேஜ்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் கட்டப் பணிகள் ஜனவரியில் தொடங்கும். முழு திட்டமும் ஜூன் 2025 க்குள் முடிவடையும், " என்றார்
தமிழ்நாட்டின் ஒன்பது முக்கிய மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றான வடசென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடித் துறைமுகம், மாநிலத்தின் இரண்டு பெரிய ஏற்றுமதி சார்ந்த மீன் பதப்படுத்தும் இடமாகும். 96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காசிமேடு துறைமுகம் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு கடல் பகுதியில் சுமார் 750 இயந்திர படகுகள் தினமும் சென்று மீன் பிடித்து வருகின்றன.
காசிமேடு துறைமுகத்ததை மத்திய அரசு சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.. அதன்படியே நவீனமயமாக்க முடிவு செய்துள்ளது. அதற்காக காசிமேடு துறைமுகத்தில் கூடுதல் மீன் இறங்கு தளங்கள், இயந்திரமயமாக்கப்பட்ட மீன் கையாளும் வளாகம், கப்பல்-லிப்ட் படகு பழுதுபார்க்கும் வசதி, சுத்தம் செய்தல், பேக்கேஜிங் மற்றும் குளிர்பதனக் கிடங்கு, சுகாதார வளாகம் ஆகியவை அமைக்கப்டஉள்ளது. மேலும் படகுகள் சரியான நுழைவு/வெளியேறும் ஏற்பாடுகளுடன் கூடிய சுற்றுச்சுவர் , தரமான குடிநீர் விநியோகம் மற்றும் சிறப்பான கழிவுகளை அகற்றும் வசதிகள் அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுபற்றி காசிமேடு துறைமுகத்தில் ஐஸ் தொழிற்சாலை நடத்தி வரும் நாஞ்சில் ரவி என்பர் பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், படகுகளை பழுதுபார்க்கும் வசதிகள், உதிரி பாகங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விற்கும் கடைகள், மீன் பதப்படுத்தும் பகுதிகள் ஆகியவை எங்களுடைய காசிமேடு துறைமுகத்தில் மீன் இறங்கும் தரத்தை நிச்சயம் மேம்படுத்த உதவும்.
தற்போது நாங்கள் நேரடியாக மீன்களை ஏற்றுமதி செய்வதில்லை. அதில் பெரும்பாலானவை கேரளாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன் ஏற்றுமதிக்கு மீன்பிடி துறைமுகங்கள் குறிப்பிட்ட தரத்தில் இருக்க வேண்டும். இங்குள்ள மீன்பிடி துறைமுகத்தில் பல வசதிகள் இல்லை. இந்த புதிய திட்டம் மீனவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்" என்றார்.
இத்திட்டத்தை வரவேற்றுப் பேசிய மீனவ சமுதாயத் தலைவர் எம்.டி.தயாளன் பேசுகையில், மீனவர்களுக்கென தனியாக வங்கியோப அல்லது வங்கி கடன் பெறுவதற்கான முறையான அமைப்பையோ அரசு தொடங்க வேண்டும் . தமிழக அரசு மீனவர்களுக்கான வங்கி அமைப்பதற்காக வேலைகளை செய்து வருகிறது. அப்படி வங்கி தொடங்கப்பட்டால், அதிக மீன்பிடி படகுகள் பயணத்திற்கு செல்ல முடியும், ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் மீன்களை கொண்டு வர முடியும். தற்போது 60% மீன்பிடி படகுகள் மட்டுமே துறைமுகத்தை விட்டு வெளியேறுகிறது" என்றார்.
காசிமேடு மீன்படி துறைமுகத்தை அடுத்த 3 மாதத்தில் மேம்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்க உள்ளனர். இப்பணி, ஆறு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, முதல் தொகுப்பு, ஜனவரிக்குள் துவங்கும். முழு திட்டமும் ஜூன் 2025 க்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டம் மீனவ மக்களுக்கும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications