காட்பாடி சங்கீதாவுக்கு சங்கடம்.. 2 தொகுதியில் வேட்பு மனு.. இப்ப துரைமுருகன் குடும்பத்துக்கு ட்விஸ்ட்
சென்னை: காட்பாடி சங்கீதாவின் 2 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.. வேலூர் மாவட்டத்தின் மிக முக்கியத் தொகுதியாகக் கருதப்படும் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில், தற்போதைய தேர்தல் களம் எதிர்பாராத திருப்பங்களையும் பரபரப்பையும் சந்தித்துள்ளது. திமுகவின் கோட்டையான இந்த தொகுதியில், முக்கிய புள்ளிகளான அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோரின் குடும்பத்தினர் சார்ந்த தேர்தல் நடவடிக்கைகள் பெரும் கவனம் ஈர்த்து வருகின்றன..
காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிட்ட பெரும்பாலான தேர்தலில் அதிமுக வேட்பாளரை தான் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் காட்பாடி தொகுதியை பொருத்தவரை துரைமுருகனுக்கு எப்போதுமே வெற்றி முகம் தான். எனினும், இந்த சட்டமன்றத் தேர்தலில் வயது முதிர்வை காரணம் காட்டி துரைமுருகனுக்கு காட்பாடி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற பேச்சு கடந்த மாதம் முதலே பரவியது.

ஆனாலும் காட்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்க துரைமுருகன் ஆர்வமாக உள்ளதாகவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.. நிலைமை இப்படியிருக்க தன்னை "காட்பாடி தொகுதி வேட்பாளர்" என அழைக்க வேண்டாம் என துரைமுருகனே பேசியிருந்தார்..
துரைமுருகன் குடும்பம்
ஒருவேளை வயது முதிர்வை காரணம் காட்டி, காட்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால் மருமகள் காட்பாடி தொகுதியில் களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன..
அதற்கேற்றவாறே, வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் கதிர் ஆனந்தின் மனைவி க. சங்கீதா வேட்பு மனுத் தாக்கல் செய்தார்... மேலும், சைதாப்பேட்டையிலும் சங்கீதா கதிரானந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்..
அதேபோல திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனும் 11வது முறையாக காட்பாடியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.. தமக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், சங்கீதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி தொகுதியில் போட்டியிட சங்கீதா முறைப்படி வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அதே நேரத்தில், அவர் சென்னை சைதாப்பேட்டை தொகுதியிலும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இவரது பெயர் 2 தொகுதிகளில் இருந்ததால் சங்கீதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
நிராகரிப்புக்கு என்ன காரணம்?
காட்பாடியில் துரைமுருகனுக்கு மாற்று வேட்பாளராகவும், சைதாப்பேட்டையில் தனி வேட்பாளராகவும் அவர் களம் இறங்கிய நிலையில், இரு தொகுதிகளின் வாக்காளர் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றிருந்ததே இந்த சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது..
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு நபர் இரு வேறு தொகுதிகளில் வாக்காளராக இருப்பது விதிமீறல் என்பதால், இந்த முரண்பாட்டை தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்து மனுக்களை தள்ளுபடி செய்திருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ஆவணங்கள் சரியா?
மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது, சைதாப்பேட்டை தொகுதியில் அவர் தாக்கல் செய்த மனுவில் தேவையான ஆவணங்கள் முறையாக இணைக்கப்படாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது..
அல்லது மற்றொரு தொகுதியில் வாக்காளராக இருந்ததால், அதற்கான சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல் (Certified Copy) உள்ளிட்ட ஆவணங்களில் ஏற்பட்ட பிழைகள் காரணமாகவே சங்கீதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
மாற்று வேட்பாளர் விதிமுறை
ஒரு நபர் சட்டப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியும். அதேபோல இந்திய தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு நபர் ஒரு தொகுதியில் மாற்று வேட்பாளராகவும் (Dummy Candidate), அதே நேரத்தில் மற்றொரு தொகுதியில் முதன்மை வேட்பாளராகவும் களமிறங்குவதில் சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை..
இருந்தாலும் இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில உள்ளன.. மாற்று வேட்பாளர் என்பவர், முதன்மை வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே களத்தில் இருப்பார்.. ஒருவேளை முதன்மை வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டுவிட்டால், மாற்று வேட்பாளரின் மனு தானாகவே செல்லாததாகிவிடும் அல்லது அவர் தனது மனுவை திரும்பப் பெற வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதி உண்டு, ஆனால் இரண்டு தொகுதிகளின் ஆவணங்களும் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு சரியாக இருக்க வேண்டும்.. ஒன்றில் தவறு இருந்தாலும் அந்த மனு தள்ளுபடி செய்யப்படுவது உறுதி..
தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துரைமுருகனின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதாவின் மனு நிராகரிக்கப்பட்டது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications