சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்டிடிஈ பிரபாகரன் உண்ணாவிரதமும் எம்ஜிஆரின் கோபமும்... கே.சி.பழனிசாமியின் அனுபவம்

Google Oneindia Tamil News

எம்ஜிஆர் கண்டுபிடித்த மிக இளம் தலைவர்களில் ஒருவர் கே.சி.பழனிசாமி. எம்ஜிஆர் பிறந்த நாளான இன்று அவர் எம்ஜிஆருடனான தனது அனுபவத்தை ஒன் இந்தியாவுக்காக பகிர்ந்துள்ளார். சுவையான உரையாடலில் எம்ஜிஆர் கோபப்பட்டது, அவரது விடா முயற்சி, தொண்டர்களை மதிப்பது, மற்றவர்களின் உணர்வுகளை மதித்தது உள்ளிட்டவை அடங்கும்.

மக்களை நேசித்த எம்ஜிஆர்

மக்களை நேசித்த எம்ஜிஆர்

முழுமையான மனிதரே தலைவராக முடியும். அந்த வகையில் வாழ்க்கையில் தான் இளமை காலத்தில் அடைந்த வறுமையை கணக்கில் கொண்டு தான் சம்பாதித்த பணத்தை பெரும்பாலும் ஏழை மக்களுக்கு கொடுத்து உதவியவர் எம்ஜிஆர். அவர் இளைஞர்கள் பலரை கட்சிக்கு கொண்டுவந்தார். 1977 ஆம் ஆண்டு இளம் தலைவராக இருந்த பலரும் இன்று 60 வயதை கடக்கும்நிலையில் உள்ளனர் அவர்களில் பலர் அவருடன் பழகிய நாட்களை மறப்பதில்லை.

திருமணம் மண்டபத்தில் எம்ஜிஆரின் சமயோஜிதம்

திருமணம் மண்டபத்தில் எம்ஜிஆரின் சமயோஜிதம்

அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர் முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி தனது அனுபவங்களை விவரிக்கிறார். "எம்ஜிஆருடனான எனது அனுபவம் என்றால் எனது திருமண நாளை முதல் அனுபவமாக சொல்லிவிடுகிறேன். எனது திருமண நாள் அன்று காரில் வந்து இறங்கிய எம்ஜிஆரிடம் மாலையை கொடுத்து வரவேற்றேன். பின்னர் அவர் மேடையை நோக்கி நகர நான் கூட்டத்தில் சிக்கிக்கொண்டேன்.

சில அடிகள் சென்ற அவர் திரும்பி பார்த்தார். என்னை காணவில்லை கூட்டத்தில் சிக்கியுள்ளதைப்பார்த்து, என்னை அழைத்து வரவைத்தார். அருகில் வந்த என்னிடம், என் காதுக்கருகில் ஓடிப்போய் மேடையில் நில்லு என்று என்னிடம் சொன்னார். அதற்கு காரணம் நான் மாப்பிள்ளை கூட்டத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக. அதேபோல் மேடைக்கு வந்தேன் மேடையில் அவர் வரும்போதே அவரிடம் பொதுமக்கள் கட்சிக்காரர்கள் மனு கொடுத்ததை வாங்கிக்கொண்டு வந்தவர் மேடையில் நாற்காலியில் அமர்ந்து மனுவை படிக்க ஆரம்பித்தார்.

பொதுமக்கள், கட்சிக்காரர்கள் மனுவுக்கு எம்ஜிஆர் கொடுத்த மரியாதை

பொதுமக்கள், கட்சிக்காரர்கள் மனுவுக்கு எம்ஜிஆர் கொடுத்த மரியாதை

எம்ஜிஆரிடம் உள்ள சிறப்பான குணம் மனுவை அவரே படித்து இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பார். திருமண வீட்டிலும் அவர் மனுவை படிப்பதை என் கல்யாண மேடையில் பார்க்கலாம். படிக்கும்போதே நிற்கும் என்னை கையைப்பிடித்து அமரவைத்தார். திருமணத்தின்போது எனக்கும் என் மனைவிக்கும் இடையில் நின்றிருந்த அவர் என்னை என் மனைவி அருகில் நிற்கவைத்து அவர் பக்கத்தில் நின்றார். என்னிடம் கணவன் மனைவி இடையே யாரும் நிற்கக்கூடாது என்று சொன்னார். தலைவரே நீங்கள்கூடவா என்று நான் கேட்க நானே இருந்தாலும் கூட என்று சொன்னார். வேறு எந்த தலைவரும் அப்படி செய்து நான் பார்த்ததில்லை.

எம்ஜிஆரின் வில்பவர்

எம்ஜிஆரின் வில்பவர்

1985 ஆம் ஆண்டுதான் என் திருமணம் நடந்தது. என் திருமணத்துக்கு முன்னர்தான் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து வந்திருந்தார். அவரால் பேசமுடியாத நேரம். முதன்முதலில் என் திருமணத்தில் தான் மேடையில் பேசினார். என் பெயரை பழனிசாமி என்பதை உச்சரித்துவிட்டார். ஆனால் என் மனைவி பெயர் சௌந்தரி என்பதை அவரால் உச்சரிக்க முடியாமல் திணறினார். கீழே உள்ளவர்கள் கண்ணீர்விட்டு பேச வேண்டாம் என்று கண்ணீர்மல்க கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அவர் வார்த்தையை நிறுத்தி விட்டு கூட்டத்தை பார்த்து சிரித்தார். கூட்டம் ஆரவாரம் செய்தது. அவர் வில் பவருக்கு உதாரணம் என்ன என்றால் அவர் அழகாக உச்சரித்து பேசி முடித்துவிட்டார். இது எனது திருமணத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம். தொண்டர்களை அப்படி மதிப்பார். அப்போதெல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் கிடையாது. நேராக அனைவரும் ராமாவரம் தோட்டம் வருவார்கள். அனைவரையும் பார்த்துவிட்டுத்தான் கோட்டைக்கு புறப்படுவார்.

கட்சி நிர்வாகிகளை பாசத்துடன் அணுகிய எம்ஜிஆர்

கட்சி நிர்வாகிகளை பாசத்துடன் அணுகிய எம்ஜிஆர்

ஒருநாள் கூட யாரையும் பார்க்காமல் அவர் ராமாவரம் தோட்டம் வீட்டை விட்டு புறப்பட்டதாக சரித்திரம் இல்லை. கட்சிக்காரர்கள் பிரச்சினை என்றால் தன் அதிகாரத்தை செலுத்தி பிரச்சினையை முடிக்காமல் அவர்களை அரவணைத்தே பிரச்சினையை முடிப்பார். சட்டமேலவையை ஒழித்த நேரம் ஆர்.எம்.வீரப்பன் எம்.எல்.சியாக இருந்ததால் அவர் மந்திரிப்பதவியை தொடர எம்.எல்.ஏவாக நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்போது நெல்லைக்கு இடைத்தேர்தல் அதில் ஆர்.எம்.வீ போட்டியிடுவதாக அறிவித்தார் எம்ஜிஆர். இது மாவட்டச் செயலாளராக இருந்த கருப்பசாமி பாண்டியனுக்கு பிடிக்கவில்லை, அவர் போட்டியிட நினைத்தார். அதனால் கோபத்தில் இருந்தார். அவர் நேராக கருப்புசாமி பாண்டியனுக்கு போன் செய்து உன் வீட்டுக்கு வருகிறேன் உன் வீட்டில் தான் சாப்பாடு. ஆர்.எம்.வீ ஆதரவாளர் கூட்டம் என பேசி சமாதானப்படுத்திவிட்டார். அதுதான் அவரது ஸ்பெஷல். அவர் ஒரு சைடு எடுக்க மாட்டார், அரவணைத்துக் கொண்டு போய்விடுவார். அதுதான் எம்ஜிஆர்.

தொண்டர்கள் மீது பாசம் கொண்ட எம்ஜிஆர்

தொண்டர்கள் மீது பாசம் கொண்ட எம்ஜிஆர்

அதேபோல் கட்சித்தொண்டர்களை மிகவும் மதிப்பார். ஒருமுறை எம்ஜிஆர் மன்ற மாநாட்டுக்கு வந்திருந்தார், பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்தார். ஹோட்டலுக்கு வெளியே தொண்டர்கள் கூட்டம் முண்டியடித்தது, அப்போது எம்ஜிஆரை பாதுகாக்க சிஆர்பிஎஃப் வீரர் ஒரு தொண்டரை அடித்துவிட்டார். எம்ஜிஆருக்கு வந்ததே கோபம் அப்படி ஒரு கோபத்தை நான் பார்த்ததே இல்லை. எப்படி தாக்கலாம், அவர்கள் என்னைப்பார்க்கத்தானே வந்துள்ளார்கள் என்று கோபப்பட்டார். அந்த போலீஸ்காரர் மன்னிப்பு கேட்டப்பின்னும் எம்ஜிஆர் சமாதானமாகவில்லை.

பிரபாகரன் உண்ணாவிரதமும் எம்ஜிஆரின் கோபமும்

பிரபாகரன் உண்ணாவிரதமும் எம்ஜிஆரின் கோபமும்

இதேபோல் எனக்கு தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கைதாகி அவரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தது உங்களுக்கு தெரியும், தன்னிடமிருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்கக்கோரி அவர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது எம்ஜிஆர் கோவைக்கு வந்திருந்தார், அந்த விஷயத்தை கேள்விப்பட்டு எம்ஜிஆர் கடுமையான கோபத்தில் இருந்தார்.

கோவையில் இருந்த அவரை காண நான் சென்றேன். அப்ப அவரது உதவியாளர் வாங்க தலைவர் கோபமாக இருக்கிறார், உங்களை பார்த்தால் கொஞ்சம் சமாதானமாவார் என்று உள்ளே அனுப்பி வைத்தார். உள்ளே போன என்னைப்பார்த்து சிரித்தார். அப்ப டிஜிபி மோகன்தாஸிடம் எம்ஜிஆர் பேசிக்கொண்டிருந்தார். பிரபாகரன் போராளி அவர் காந்திய வழியில் உண்ணாவிரதம் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை, அவரை கிளம்பி அவரது ஊருக்கு போகச்சொல்லுங்கள், அவரிடம் பறிமுதல் செய்ததைவிட 4 மடங்கு ஆயுதம் அவருக்கு அங்கே கிடைக்கும்னு சொல்லுங்க என்று சொல்லி போனை வைத்தார்.

பின்னர் எம்ஜிஆர் தகவலை ஏற்று பிரபாகரன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றதும், அவருக்கு தலைவர் உதவியதையும் நாடே அறியும். அன்று பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்ததை எம்ஜிஆரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, கோபப்பட்டார், அதில் அவருக்கு அவர்கள் மீதுள்ள பாசத்தைக்கண்டேன்".

இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.

English summary
LTTE Prabhakaran fast and MGR's anger ... KC Palanisamy's experience, எல்டிடிஈ பிரபாகரன் உண்ணாவிரதமும் எம்ஜிஆரின் கோபமும்... கே.சி.பழனிசாமியின் அனுபவம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X