சத்தீஸ்கர் நிலக்கரி சுரங்க பகுதியை பாதுகாக்க 16 லட்சம் மரங்களை நடவு செய்யும் அதானி நிறுவனம்!
சண்டிகர்: சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள இடத்தை பசுமையாக்கும் முயற்சியில் அதானி என்டர்பிசைரஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி மரம் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து நிலக்கரி எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மரம் நடும் பணியை தொடங்கி உள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. பார்சா கிழக்கு மற்றும் காந்தா பாசன் (PEKB) சுரங்கத்தில் மரம் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நிலக்கரி எடுக்கப்பட்ட பிறகு இந்த இடத்தை அடர் வனமாக மாற்றும் வகையில் இந்த பணி நடந்து வருகிறது. இங்கு சுமார் 568 ஹெக்டேர் நிலப்பரப்பில் 1.6 மில்லியனுக்கும் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம். 1.6 மில்லியன் என்பது 16 லட்சம்) அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன.
இந்த திட்டம் சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட நிலத்தை மீட்டெடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி பல்லுயிரியலை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இது நம் நாட்டின் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இந்த 10 ஆண்டு இறுதிக்குள் மொத்தமாக 4 மில்லியன் மரங்களை நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுரங்க பணிகளுக்குப் பின் சுற்றுச்சூழல் சமநிலையை உறுதி செய்ய இது உதவும்.
இங்கு வெட்டப்படும் ஒரு மரத்திற்கு மாற்றாக 40 மரங்கள் நடப்படுகின்றன. இதில் சால், மகுவா, தெண்டு, அமல்தாஸ், சிதா போன்ற மரங்கள் உள்ளன. நட்ட மரங்களில் 88 சதவீத மரங்கள் உயிர் பிழைத்துள்ளன. இதன்மூலம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தூய்மையான காற்று கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இயற்கை சூழலை மேம்படுத்தும். இதனை மத்திய நிலக்கரி அமைச்சகம் பாராட்டி உள்ளது. இதுபற்றி லிங்க்ட்இன் வலைதள பக்கத்தில், ''சுரங்கப் பணிகள் முடிந்தவுடன், சுற்றுச்சூழல் மீட்சி தொடங்குவதை இது காட்டுகிறது. நிலையான எதிர்காலத்திற்கு இது ஒரு சான்றாக உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டத்துக்காக 3.5 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5,00,000 மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதற்காகச் சத்தீஸ்கர் அரசிடம் ரூ.259 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. வனவிலங்கு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
சுரங்க நடவடிக்கைகளுடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார உதவிக்குத் தனி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து வனத்துறை விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளை நிறுவனம் முறையாக பின்பற்றி வருவதோடு அதுதொடர்பான அறிக்கைகள் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications