தமிழர் தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழாய்வு: 8-ம் கட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டு ஏழு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப்பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் - மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப்பணிகளைக் காணொலிக்காட்சி (Video Conferencing) வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ் நிலமானது மிகத் தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல் பூர்வமாக நிறுவவேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும்.
அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக் கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 1. கீழடிமற்றும்அதனைச்சுற்றியுள்ளஇடங்கள் (கொந்தகை, அகரம், மணலூர்), சிவகங்கைமாவட்டம் - எட்டாம்கட்டம் 2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் - மூன்றாம் கட்டம் 3. கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்- இரண்டாம் கட்டம் 4.மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்- இரண்டாம்கட்டம் 5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் - முதல் கட்டம் 6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்- முதல் கட்டம் 7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம்- முதல் கட்டம் ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்

கீழடி அகழாய்வு
கீழடி அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சி, மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக விளங்கும் அரிய தொல்பொருட்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு கொண்டதற்கான கூடுதல் சான்றுகளைத் தேடியும், நகர நாகரிகக் கூறுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த எட்டாம் கட்ட அகழாய்வு நடைபெறும்.

சிவகளை, மயிலாடும்பாறை
தண் பொருநை ஆற்றங்கரையில் (தாமிரபரணி ஆற்றங்கரை) வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய கூடுதல் சான்றுகளைத் தேடி அகழாய்வு மேற்கொள்ளப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்விலும் அவற்றில் கிடைக்கக்கூடிய தொல் பொருட்களுக்கும், வரட்டனபள்ளி மற்றும் கப்பலவாடி போன்ற ஊர்களிலும் கண்டறியப்பட்டதன் வாயிலாக புதியக் கற்கால மனிதர்கள் தங்களது வேளாண்மை நடவடிக்கைகளை தமிழகத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர் என்பதனை நிரூபிக்க சான்றாக இத்தளம் அமையும்.

கங்கைகொண்ட சோழபுரம்- மாளிகைமேடு
சோழப் பேரரசின் மாமன்னன் முதலாம் இராசேந்திரனின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக் கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரிலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலையில் நம்பி ஆற்றின் இடது கரையில் துலுக்கர்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து கண்ணநல்லூர் செல்லும் சாலையில் 2.5 கி.மீ தொலைவில், வாழ்வியல்மேடு காணப்படுகிறது. இந்த அகழாய்வின் குறிக்கோள் செறிவு மிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்றமுறை மற்றும் தொல் பொருட்களின் தன்மை ஆகியவற்றைக் கண்டறிவதாகும். நம்பி ஆற்றின்கரையில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இவ்வகழாய்வின் நோக்கமாகும்.

சிவகாசி-வெம்பக்கோட்டை
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் வெம்பக்கோட்டை என்ற ஊர் அமைந்துள்ளது. மேடு என்றும் உச்சிமேடு என்றும் அழைக்கப்படுகின்ற 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்ற தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிப்படுத்துகின்றது. தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமானது கால வாரியாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னனியில் அதிக எண்ணிக்கையிலான நுண் கற்கருவிகளைச் சேகரிப்பதாகும்.

தர்மபுரி பெரும்பாலை
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் - மேலச்சேரி சாலையில் பென்னாகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் பாலாற்றின் இடது கரையில் பெரும்பாலை என்னும் வராலாற்றுச் சிறப்புமிக்க இடம் அமைந்துள்ளது. இவ்வூர் கொங்கு நாட்டின் வடயெல்லையாக தொன்று தொட்டு கருதப்படுகிறது. இங்குள்ள வாழ்விட மேடானது தற்போதைய நிலவியல் அமைப்பிலிருந்து 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் 75 ஏக்கர் நிலப் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. பாலாற்றின் ஆற்றங் கரைகளில் இரும்புக் காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவது இந்த அகழாய்வின் நோக்கமாகும். 15 இலட்சம் ஆண்டுகள் கொண்ட இந் நிலப்பகுதியின் தொன்மை வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு அதிகளவிலான சான்றுகள் தேவை. எழுதப்படுகின்ற வரலாறானது அறிவியல் அடிப்படையிலான சான்றுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அன்று முதல் இன்று வரையிலான கால கட்டங்களில் விடுபட்டுள்ள வரலாற்றினைப் பூர்த்தி செய்து எழுதுவதற்கு அகழாய்வுகள் செய்வது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications