முல்லைப் பெரியாறு.. மக்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்த்து வந்த நிலையில், நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.70 அடி ஆகவும், நீர் வரத்து 6143 கன அடி ஆகவும் இருந்தது.

இந்த நிலையில் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியுள்ளது. அதேபோல் முல்லைப் பெரியாற்றில் ஆகஸ்ட் 10 வரை அணை நீர்மட்டம் 137.50 அடியாக நிலை நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின், முல்லைப் பெரியாறு அணை 7வது முறையாக 136 அடியை கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை விநாடிக்கு 2,831 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 6 மணி அளவில் 6,143 கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 137அடியை எட்டியுள்ளது.
2014ல் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, 2014, 2015, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 7வது முறையாக நீர்மட்டம் 136 அடியை கடந்துள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் திறப்பது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
அந்தக் கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 137 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் நீர்வரத்தை விட, நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். அதேபோல் படிப்படியாக நீரை வெளியேற்ற வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தமிழக அரசு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications