1000 ரூபாய் பிச்சைக் காசா? குஷ்பு சர்ச்சையில் திமுகவுக்கு அதிமுக ஆதரவு !
சென்னை: திமுக அரசின் திட்டத்தைத் தரக்குறைவாக விமர்சித்த குஷ்புக்கு அதிமுக கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு செயல்படுத்தி உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் பற்றி நடிகை குஷ்பு பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது.
பாஜகவை எந்த ஆயுதத்தைக் கொண்டு தேர்தல் களத்தில் வீழ்த்தலாம் என்று காத்திருந்த திமுகவினருக்கு குஷ்புவின் பேச்சு சரியான தீனியாக அமைந்து விட்டது என்றே தெரிகிறது.
ஈரோடு, திருப்பூர் என்று பல மாவட்டங்களில் குஷ்புவின் பேச்சுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதில் சில இடங்களில் குஷ்பு உருவபொம்மை எரிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் சீரியஸ் ஆகி உள்ளது.
சில தினம் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, 'தாய்மார்களுக்கு 1000 ரூபாய் பிச்சைப் போட்டால், அவர்கள் வாக்களித்துவிடுவார்களா?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அவரது இந்தப் பேச்சு உரிமைத் தொகைப் பெறும் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன், "நடிகை குஷ்பு 'கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தைப் பற்றி மிக இழிவாகப் பேசி இருக்கிறார்.
தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாகக் கூறியிருக்கிறார். உரிமைத் தொகை பெறும் 1 கோடியே 16 லட்சம் பெண்களை இழிவுப்படுத்தி குஷ்பு பேசி இருக்கிறார்.

அவரது பேச்சு வருத்தத்தைத் தருகிறது. பெண்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி அறியாதவர் அவர் என்பதை அவரது பேச்சின் மூலம் அறிய முடிகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிலையைப் பற்றி குஷ்புவுக்கு என்ன தெரியும்? அந்தப் பெண்களின் வாழ்வாதாரம் பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?
அந்த 1000 ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை குஷ்பு அறிவாரா? ஒன்றுமே தெரியாமல் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் மைக்கை பார்த்தவுடன் பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உங்களுக்கு ஆயிரம் ரூபாய் பொருட்டே இல்லை. நீங்கள் கோடியில் புரளுகின்றவர். பணவசதி படைத்தவர். நீங்கள் பெரிய நடிகை. ஆகவே ஆயிரம் ரூபாய் என்பது பிச்சைக்காசாகவே தெரியும்.

ஆனால், இந்த 1000 ரூபாய் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக, மருத்துவச் செலவுக்காக, குடும்பச் செலவுக்காக எத்தனையோ பெண்களுக்குப் பயன் தருவதாக உள்ளது.
அதைப் போய் பிச்சை என்று அசால்ட் ஆகச் சொல்கிறீர்கள்? பிச்சை என்பதற்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? உங்களுக்குத் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். ஆகவே அடக்கி வாசியுங்கள்" என்று கூறியுள்ளார்.
தமிழகம் முழுக்க போராட்டக் களத்தில் திமுக குதித்துள்ளது குறித்து குஷ்பு அவரது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தைப் பிச்சை என்று மறைந்த முரசொலி மாறன் விமர்சித்திருந்ததாகவும்

அதைப்போல் மகளிர் இலவசப் பேருந்து பயணத்தை ஓசி என முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி விமர்சித்திருந்ததாகவும் அதைப் பற்றி திமுகவினர் பேசாதது ஏன்?' என்று சில உதாரணங்களை எடுத்துக் காட்டி எழுதி உள்ளார்.
எப்போதும் அரசியல் களத்தில் திமுகவும் அதிமுகவும் எலியும் பூனையுமாக இருக்கும். ஆனால், குஷ்பு விவகாரத்தில் அதிமுக தரப்பு திமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது என்பது ஆச்சரியமான தகவல்.

குஷ்புவின் பேச்சுக்கு அதிமுக கூட பதிலடி கொடுத்துள்ளது. குஷ்புவின் பேச்சு குறித்து கே.பி.முனுசாமி, "ஒரு அரசு கீழ்த் தட்டு மக்களுக்காகக் கொண்டு வந்த திட்டத்தைப் போய் சகோதரி குஷ்பு பிச்சை போடுவது என்று சொல்லி இருக்கிறார். அதை நான் கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள தென் பகுதிகளில் பெண் பிள்ளைகள் பிறக்கும் முன் கருவிலேயே அழிக்கும் முறை இருந்தது. அதை ஒழிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொட்டில் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதன் மூலம் பல ஆயிரம் பெண் பிள்ளைகள் உயிர்பிழைத்தனர். அந்தப் பிள்ளைகள் எல்லாம் இன்று நல்ல வேலையில் உள்ளனர்.

அதைப்போலவே ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி செய்வதற்காகத் தாலிக்குத் தங்கம் திட்டத்தைக் கொண்டுவந்தார். ஏழைக் குடும்ப தாய்மார்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் கொடுத்தார். இலவச அரிசி கொடுத்தார். கர்ப்பிணிப் பெண்கள் சத்தான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்பதற்காக 18 ஆயிரம் ரூபாயை மூன்று தவணையாக ஒதுக்கிக் கொடுத்தார்.
இவை எல்லாம் ஏழ்மை நிலையில் உள்ள சகோதரிகளைக் கைபிடித்து உயர்த்துகின்ற திட்டங்கள். அதைப்போலத்தான் திமுக அரசு மகளிருக்கு 1000 ரூபாய் கொடுப்பது. அதைக் கொச்சைப்படுத்துவது குஷ்புவின் அறியாமை என்றே சொல்ல வேண்டும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications