பச்சை கவரில் வந்த ரிப்போர்ட்.. கொடநாடு கொலை, கொள்ளை நடந்தது இதற்குதான்.. டிடிவி தினகரன் பகீர்!
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அமைச்சர்கள் தொடர்பான உளவுத்துறை கோப்புகளை தேடி தான் கொடநாட்டில் கொலை, கொள்ளைகள் நடந்தன என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால் பச்சைக் கவரில் அளிக்கப்படும் உளவுத்துறை கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்த போதே, படித்து பார்த்து சிரித்துவிட்டு கிழத்துவிட்டதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறினார். இதனால் கொடநாடு வழக்கு பற்றிய விவாதம் மீண்டும் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை மற்றும் கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின் கொள்ளையடிக்க சென்ற பலரும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும், இதுவரை சொல்லிக் கொள்ளும்படி எந்த முன்னேற்றம் இல்லை. இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிர்ச்சியான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் டிடிவி தினகரன் பேசுகையில், கொடநாடு பங்களாவில் காவலாளியை கட்டி வைத்துவிட்டு, ஜன்னலை உடைத்து என்ன ஃபைல்களை தேடினார்கள். அது யார்? ஏனென்றால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உளவுத்துறையிடம் இருந்து எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வரும் அறிக்கைகள் போயஸ் கார்டனிலேயே இருக்கும்.
நானும், மருத்துவர் வெங்கடேஷும் படித்து சிரித்துவிட்டு கிழித்து எரித்துவிட்டோம். அதனை வைத்து நாங்கள் யாரையும் பிளாக் மெயில் செய்ய மாட்டோம். சசிகலா அப்போது ஜெயலலிதா அறையில் இருந்த தேவையில்லாத ஃபைல்களை பாருங்கள்.. தேவையில்லாததை நீக்கிவிடுங்கள் என்றார்.. அப்போது அதனை எரித்துவிட்டோம். அதுபோல் கொடநாட்டில் இருக்கிறது என்று யாரோ பயம் கொடுத்துவிட்டார்கள்.
நான் டெல்லியில் இருந்த போது அந்த சம்பவம் நடந்தது. கொடநாடு விவகாரத்தில் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்கள்.. ஏப்ரல் 17ஆம் தேதி என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள். சசிகலா சிறையில் இருந்தார்.. என்னை கட்சியை விட்டு நீக்கியதால், எடப்பாடி பழனிசாமிக்கு பயம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஆனால் அந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.. எல்லாம் போயஸ் கார்டனில் தான் இருந்தது என்று..
அதனை வைத்து பிளாக்மெயில் செய்ய வேண்டும் என்ற கேவலமான எண்ணம் எல்லாம் இல்லை.. அதனை படித்த போது எல்லோரைப் பற்றிய லீலா வினோதங்கள் எல்லாம் இருந்தது.. ஜெயலலிதாவே சில நேரங்களில் முன்பெல்லாம் என்னிடம் ஒரு கவரில் சிரித்துக் கொண்டே கொடுத்து படிக்க சொல்லுவார்.. பச்சைக் கவரில் ஜெயலலிதாவுக்கு வரும்.. அவையனைத்தையும் எரித்துவிட்டோம்.. பாவம் பழனிசாமி அங்கு சென்று தேடியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications