எடப்பாடி பழனிச்சாமியை யாரோ மிரட்டி இயக்குகிறார்கள்.. ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை. அவரை யாரோ மிரட்டி இயக்குகிறார்கள் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வடசென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாவட்டச் செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கொளத்தூர் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர். இவர் நேற்றைய தினம் கொளத்தூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் அதிமுக பொதுக் குழுவில் குண்டர்கள்தான் அதிக அளவில் கலந்து கொண்டனர். குண்டர்களை குவித்தால் ஓபிஎஸ் பயந்து கொண்டு வரமாட்டார் என எடப்பாடி பழனிச்சாமி நினைத்திருந்தார்.

ஆளுமை
ஆனாலும் தனியாக வந்து தனது ஆளுமையை ஓபிஎஸ் நிரூபித்துவிட்டார். ஓபிஎஸ் அணி பிரிந்து இருந்த காலத்தில் அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எத்தனை பேர் காலில் வந்து விழுந்தார்கள் என்பது உடனிருந்த எனக்கு தெரியும். அப்போது இதே எடப்பாடி பழனிச்சாமிதான் இரட்டை தலைமை என கூறியிருந்தார்.

ஒற்றைத் தலைமை
ஆனால் இன்றைய தினம் ஒற்றைத் தலைமை என்கிறார். ஆதாயத்திற்காக பொதுக் குழு, செயற்குழு நடந்த பகுதியில் இருந்த பேனர்களை கிழித்துள்ளார்கள். எந்த ஒரு உண்மையான அதிமுகவை சேர்ந்தவரும ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படங்கள் உள்ள பேனரை கிழிக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் அதையும் செய்து காண்பித்துவிட்டார்கள்.

ஓட்டெடுப்பு
ஒற்றைத் தலைமை வேண்டுமானால் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓட்டெடுப்பு நடத்தி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் தலைவராக வர வேண்டும். அது யாராக இருந்தாலும் நான் ஏற்கிறேன். ஜெயலலிதாவால் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்ட ஒரு தலைவரை பொதுக் குழுவில் அழைத்து வைத்து எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அவமானப்படுத்தி அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் நாங்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளோம்.

கையெழுத்து
மாவட்டச் செயலாளர் பதவியை கூட விட்டுத் தராதவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. இவர் எப்படி தலைவராக முடியும். இதே ஓபிஎஸ் முதல்வர், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை விட்டுக் கொடுத்துள்ளார். மீண்டும் பொதுக்குழு , செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் கூட்ட முடியாது.
Recommended Video

ஓரம் கட்ட முடியாது
பொதுக் குழு, செயற்குழு முடிந்த பிறகு பெரும்பாலானோர ஓபிஎஸ்ஸிடம் தொலைபேசியில் பேசி வருகிறார்கள். ஓபிஎஸ்ஸை யாராலும் ஓரம் கட்ட முடியாது. முடிந்தால் ஓரம் கட்டி பாருங்கள். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கொந்தளிப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி தற்போது அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை. அவரை யாரோ மிரட்டி இயக்குகிறார்கள். எனவே ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் ஒன்று கூடி பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications