கொரோனா 2-வது அலை பரவலுக்கு... மத்திய-மாநில அரசுகளின் மெத்தனமே காரணம் -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: கொரோனா 2-வது அலை பரவலுக்கு மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே காரணம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்த போது மத்திய, மாநில அரசுகள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததால் மிக அதிகப்படியான பாதிப்பையும், உயிரிழப்பையும் அனைவரும் சந்திக்க நேரிட்டது. அதேபோல தற்போதைய கொரோனா 2-வது அலை பரவலுக்கும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே காரணம்.

கால அவகாசம்
கொரோனா தடுப்பு மருந்தை மக்கள் அனைவருக்கும் செலுத்துவதற்கான கால அவகாசம் இருந்தும் அதை மத்திய, மாநில அரசுகள் திறம்பட பயன்படுத்தி கொள்ளாமல் வீணடித்ததே இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க மிக முக்கிய காரணம். கடந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதே கொரோனா 2-வது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஏற்றுமதியில் குறி
மத்திய, மாநில அரசுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை. கொரோனா தடுப்பு மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்துவதில் காட்டியிருக்க வேண்டும்.

அதிர்ச்சி
கொரோனா பரவல் அதிகரித்தவுடன் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவ ஆரம்பித்த நிலையில்தான் மத்திய அரசிடம் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு மருந்தை கேட்க ஆரம்பித்திருக்கின்றன. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா பெருந்தொற்றின் தீவிரத்தையும், பாதிப்பையும் உணர்ந்திருக்கும் ஆளும் அரசுகள் கிடைத்த கால அவகாசத்தை தவறவிட்டது மக்களை மிகப்பெரிய பாதிப்புக்கான சூழலை நோக்கி தள்ளியிருக்கிறது. இந்திய மக்களின் மீது மத்திய அரசு போதிய கவனத்தை செலுத்தவில்லை.












Click it and Unblock the Notifications