ரூ.20 கோடியில் தரம் உயரும் கோயம்பேடு மார்க்கெட்.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டை ரூ.20 கோடியில் தரம் உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். குறிப்பாக கோயம்பேடு மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்து திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் வளாகம் கோயம்பேடு மொத்த விற்பனை பூ மார்க்கெட், காய்கறி அங்காடி வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த வணிக வளாக தூய்மை பணியாளர்களுக்கு கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

சேகர்பாபு பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், சிஎம்டிஏ சார்பில் 21 ஏக்கர் பரப்பளவில் உள்ள வணிக வளாக அங்காடியை ஆய்வு செய்தோம். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கோயம்பேடு வணிக வளாக அங்காடியில் பூ மார்க்கெட்டில் ஏற்கனவே திறக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் ஊழியர்கள் தங்கும் விடுதி, தானிய கிடங்கு, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்தோம்.

15 நாட்களில் நடவடிக்கை
பிப்ரவரி மாதம் வரை 4 கட்டங்களாக தொடர்ந்து கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்ய உள்ளோம். ஆய்வை முடித்து பிறகு செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்படும். கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டம் அதிகம் உள்ளதால் வாகனங்கள் எளிதில் உள்ளே வருவதற்கும், செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தற்போது மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை வெளியிட்டு, 15 நாட்களுக்குள் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தனி காவல் நிலையம்
கோயம்பேடு மார்க்கெட்டில் பிரச்சனைகள் வராமல் இருக்க தனி காவல் நிலையம் ஒன்று அமைக்கப்படும். இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்து, அதன் பிறகு காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வரும். பொங்கல் சிறப்பு சந்தை கோயம்பேட்டில் அமைக்கப்பட உள்ளது. மார்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த, விரைவில் வியாபாரி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

ரூ.20 கோடி ஒதுக்கீடு
திருமழிசை மொத்த சந்தை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கோயம்பேட்டில் உள்ள கடைகளை அங்கு இடமாற்றம் செய்வது குறித்து, வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து முதல்வரின் கருத்துகளை கேட்டு நிதானமாக முடிவெடுக்கப்படும். கோயம்பேடு மார்கெட்டை மேம்படுத்த ஏற்கனவே ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேம்பாட்டு திட்டங்கள்
கோயம்பேடு மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்து திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை பெறப்பட்டு மேற்கொண்டு மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை கால சிறப்பு சந்தையின் போது இடைத்தரகர்கள் இடையூறு செய்வதை கட்டுப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications