ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக காந்தி கண்ணாடி... தமிழ் மக்கள் போட்ட பிச்சை! உருக்கமாகப் பேசிய கேபிஒய் பாலா
சென்னை: நடிகர் கேபிஒய் பாலா நடித்துள்ள 'காந்தி கண்ணாடி' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், அவர் தமிழகம் முழுவதும் பயணித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சை தான் காரணம் எனவும், அவர்களுக்கு ஒரு சேவகனாக இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
விஜய் டிவி புகழ் கேபிஒய் பாலா நாயகனாக நடித்திருக்கும் காந்தி கண்ணாடி திரைப்படம் கடந்த 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஷெரிஃப் இயக்கத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருடன் நாயகனாக கேபிஒய் பாலா நடித்துள்ளார்.
பல போராட்டங்களுக்கிடையே திரையரங்குகளில் நேரடியாக ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்களிடம் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து படக்குழு தமிழகம் முழுவதும் பயணித்து நன்றி கூறி வருகிறது.

கேபிஒய் பாலா
அந்த வகையில், சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு நடிகர் பாலா வந்திருந்தார். அப்பொழுது அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து செல்ஃபி எடுத்தனர். தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா," தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் நன்றி. நான் இந்த இடத்திற்கு இருப்பதற்கு தமிழ்நாடு மக்கள் தான் காரணம். நான் இங்கே இருக்கக் காரணம் தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சை தான்.
காந்தி கண்ணாடி
கடைசி வரை அவர்களுக்கு நன்றியாக இருப்பேன். திரைப்படம் வெளியான பொழுது குறைந்த திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது. மக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிக அளவில் உள்ளதால் தற்பொழுது திரையரங்கு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் மக்கள் தான். மக்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால் தான் இந்த சினிமா தற்பொழுது நன்றாக செல்கிறது. காந்தி கண்ணாடி மக்களால் மக்கள் போட்ட பிச்சையால் நல்லபடியாக ஹவுஸ்புல்லாக போய்க்கொண்டிருக்கிறது.
மக்கள் ஆதரவு
மக்களுக்கு அட்வைஸ் பண்ணும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர்கள் தான் எனக்கு எது வேண்டுமானாலும் சொல்லலாம். நான் இங்கு இருப்பதே அவர்கள் தான் காரணம். கடைசி வரை அவர்களுக்கு ஒரு சேவகனாக இருப்பேன். என்னுடைய படத்தையும் பார்க்க எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய நடிகர்களின் திரைப்படத்தைத் திரையரங்கில் நான் பார்த்துள்ளேன். இன்று என்னுடைய படத்தைத் திரையரங்கில் பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு அனைத்து இயக்குநர்களின் டைரக்ஷன்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. தொடர்ந்து மக்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ரசிகர்கள் வரவேற்பு
படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் மிகவும் சிரமப்பட்டோம். சில தியேட்டர்களில் போஸ்டர், பேனர் வைக்க அனுமதிக்கவில்லை. படம் அந்தத் தியேட்டரில் ரிலீஸாகியும் போஸ்டர் இல்லாததால், படம் இந்தத் தியேட்டரில் ஓடவில்லை எனப் பலர் சென்றுவிட்டனர். இந்த நிலையில், இந்தப் படம் தற்போது ரசிகர்கள் வரவேற்பைப் பெற்று இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். படம் வெளியானபோது சில ரசிகர்கள் பாலாவின் பட போஸ்டர்களைக் கிழித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications