Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் சொன்ன மேட்டர்.. “இன்னும் உண்மையை உரக்க சொல்லுங்க”.. சப்போர்ட்டாக வந்த கிருஷ்ணசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை வரவேற்றுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. தொடர்ந்து தமிழக மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உரக்கச் சொல்லி வர வேண்டும், விஜய்யின் நீட் தேர்வு குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய், அதிக மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி விருது வழங்கும் விழாவை நேற்று ஏற்பாடு செய்து ஊக்கத்தொகை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் நீட் மட்டும்தான் உலகமா? சாதிக்க நிறைய துறைகள் இருக்கிறது எனப் பேசினார். இந்த கருத்து தொடர்பாக விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், விஜய் கருத்தை வரவேற்றுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.

Krishnasamy Backs TVK Vijay s Stand on NEET Urges Him to Speak Out More

கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கூறிய கருத்துக்குப் பிறகு, நீட் தேர்வு மீண்டும் விவாத பொருளாக்கப்பட்டு இருக்கிறது. விஜய் நீட் தேர்வு குறித்து சரியான கருத்தையே கூறி இருக்கிறார். தவறான கருத்தை எதையும் கூறவில்லை. ஆண்டொன்றுக்கு தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் என நான்கு துறைகள் முன்னிலை வகிக்கின்றன.

எனினும், இன்றைய காலகட்டங்களில் விண்வெளி ஆராய்ச்சி, கமப்யூட்டர், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், வணிகவியல், தொழில் முனைவோர் என உள்நாடு, வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே கிடக்கின்றன. அத்துறைகள் மருந்துவம், பொறியியல் துறைகளை விட மன நிறைவைத் தாக்கூடியதாகவும், அதிகப் பொருளீட்டக் கூடியதாகவும், புகழ் சேர்க்கக்கூடியதாகவும் உள்ளன.

பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே தங்களின் எதிர்காலத்தைச் சரியாகத் திட்டமிட்டு தாங்களே நீர்மானிக்கிறார்கள். பல நேரங்களில் பெற்றோரும், நண்பர்களும், ஆசிரியர்களும் வழிகாட்டிகளாக விளங்குகிறார்கள். எந்த மாணவரது வாழ்க்கையிலும் எந்த அரசியல்வாதிகளின் பங்களிப்பும் இதுவரையும் சொல்லும் படியாக இருந்ததில்லை. பள்ளி அல்லது கல்லூரி பாடத் திட்டங்களையும் அந்த துறை நிபுணர்களே தீர்மானிக்கிறார்கள். அவ்வப்போது அரசியல் நோக்கங்களோடு அவர்களுக்கு பிடித்தமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பள்ளிப் பாடங்களில் திணிப்பதை தவிர அரசியல்வாதிகளுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது.

எனினும் அண்மைக் காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலான பிறகு உருவான வாய்ப்புகளின் அடிப்படையில் "மத்திய அரசின் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவரை உருவாக்க வேண்டும்" என்ற உலக அளவிலான இலக்கை அடைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு தாராளம் காட்டியது. அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் அரசியல், பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் புதிய புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினர். தமிழ்நாட்டில் மிக மிக அதிகம்!

தமிழ்நாட்டில் புதிதாகத் துவங்கப்பட்ட பல மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வசதிகள் இல்லாமலேயே தேசிய மருந்துவ கல்விக் கழகத்தின் நிபந்தனைகளை மீறி மாட்டுக்கொட்டைகளுக்கு குறைவான வசதிகள் கொண்ட கட்டிடங்களில் மருத்துவக் கல்லூரிகள் நடந்த அரசியல் பலத்தோடு அனுமதி பெற்றுக் கொண்டார்கள். அந்த மருத்துவக் கல்லூரியில் சேர பெரும் தொகை மட்டுமே அடிப்படை அம்சமாக இருந்தது. தமிழ்நாடு அரசியல்வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் கூக்குரலிடுவதைப் போல கிராமப்புற, நகர்ப்புற, ஏழை, எளிய மாணவர்கள் 99 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியின் வாசல்களை எட்டிப் பார்க்க முடியாத நிலை இருந்தது. ஆனால் 50 சதவிகிதம் பெற்றிருந்தாலும் பணப்பெட்டியுடன் சென்றவர்களும், வசதி படைத்தவர்களின் பிள்ளைகளும், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதியின் பிள்ளைகளும் மருத்துவர்கள் ஆக முடிந்தது.

இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் எண்ணிக்கை அடிப்படையில் நிறைவேறியது. ஆனால், தரமான கல்வியைக் கொடுக்க முடியாத நிலை குறித்து அனைத்து தளங்களிலும் பேசுபொருளாகியது. எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி அனைத்திற்கும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தரம் நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு ஏற்ப உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 'தேசிய அளவில்' மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தி அதன் பிறகு அகில இந்திய அளவில் தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. பல மாநிலங்கள் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டன. தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிகமாக கொண்ட தமிழ்நாடு அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டு, 2017க்கு பிறகு தமிழ்நாடு நீட் தேர்வை அமலாக்கியது.

இந்த 7 வருடங்களில் ஆயிரக்கணக்கான கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றுத் தாத்தின் அடிப்படையில் எவ்வித நன்கொடையும் இன்றி மருத்துவராக முடிகிறது. ஆட்டோ டிரைவர், வேன் டிரைவர். கூலித் தொழிலாளி பிள்ளைகளும் கூட மருத்துவராக சாதனை படைக்கிறார்கள் என்ற நல்ல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்திய அரசியல் சாசனம் வகுத்துத் தந்துள்ள உண்மையான 'சமத்துவம் சம உரிமை' அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் சம வாய்ப்பு உரிமை நீட் தேர்வுக்கு பின்னர்தான் அமலுக்கு வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு திறமையின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குகிறது. அதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்துவது முழுக்க முழுக்க வெளிப்படையானதாகவே இருக்கிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாடு மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் முறையை கடைப்பிடிக்கக்கூடிய மாணவர்கள் தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநில மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடித்து விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக முதுநிலை வகுப்புகளில் தமிழ்நாடு மாணவர்கள் பலரும் பிற மாநிலங்களில் பெரும் பங்கு வகித்து வரும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாடு மாணவர்களுக்கு விளைந்துள்ள இந்த மாற்றங்களைச் சிறிதும் கணக்கில் கொள்ளாத பிற்போக்கு அரசியல்வாதிகள் மிக மிகக் குறுகிய கண்ணோட்டத்துடன் நீட் தேர்வு குறித்து தவறான எதிர் பிரச்சாரங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீட்டை ஒழிக்க வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார்கள். ஆனால், அந்த நீட் ஒழிப்பு ரகசியத்தை வெளியே சொல்லாமலேயே தமிழ்நாடு மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆட்சி, அதிகாரத்தில் சவாரி செய்து வருகிறார்கள்.

நீட் தேர்வு ஒழிப்பு குறித்த ஒரு குறிப்பிட்ட கட்சியின் தவறான வாக்குறுதியாலேயே மாணவச் செல்வங்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் நீட் தேர்வு குறித்து உண்மையைப் பேசி இருந்தால் ஒரு உயிரிழப்பு கூட நிகழ்ந்து இருக்காது. எவர் விட்டு பிள்ளையோ அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அன்றைய தினம் அனுதாப செய்திகளையும், பத்து லட்சம் பணமுடிப்புகளையும் கொடுக்கிறார்கள். ஓட்டுகளை அள்ளி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்கிறார்கள். இந்த அநியாயம் நீண்ட காலம் நீடிக்காது. நீடிக்க அனுமதிக்கக் கூடாது.

இன்றைய நவீன உலகில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு +2 தேர்வில் வெற்றி பெறும் 10 லட்சம் மாணவர்களால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 10,000 மருத்துவ இடங்களில் அனைவரும் வாய்ப்பை பெற இயலாது என்பது எதார்த்தம்.

எனவே மாணவச் செல்வங்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் முன்னேறிச் செல்ல வழி காட்ட வேண்டியது ஒவ்வொரு சமூக பற்றாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். அதை விட்டு நீட்டை ஒழிப்பது என மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலை எவர் செய்தாலும் அவர்கள் தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர்கள் எனக் கருத வேண்டும். அந்த வகையில் நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர் விஜய் கருத்துக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து தமிழ்நாடு மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லி வர வேண்டும். விஜய்யின் நீட் தேர்வு குறித்த குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+