நேரடியா அங்க மோத முடியாம ஆளுநர்கிட்ட மோதுறாங்க.. "ராமர் பாலம் உண்மை”.. திமுகவை சீண்டிய கிருஷ்ணசாமி!
சென்னை : தமிழ்நாடு முதல்வரால் நேரடியாக மோடியிடம் மோத முடியாது, மோதினால் மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காது, இதனால் ஆளுநரிடம் மோதுகிறார் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் வைத்துள்ளவர்களுக்கு தமிழகம் என்று கூறிய ஆளுநரை விமர்சிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு பொதுமை பொங்கல் விழா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கிவைத்தார். மேலும், பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நேரடியாக மோதாமல்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கிருஷ்ணசாமி, "தமிழ்நாடு முதல்வர் நேரடியாக பிரதமர் மோடியிடம் மோத முடியாது, ஆளும் மத்திய அரசிடம் மோத முடியாது. அவர்களிடம் மோதினால் மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காது, இதன் காரணமாக ஆளுநரிடம் மோதுகின்றனர். இந்தியாவில் ஒரு அங்கமாக தமிழ்நாடு திகழ்வதால் ஆளுநர் தமிழகம் என்று அழைத்துள்ளார். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. திமுக தான் உள்நோக்கத்துடன் சட்டசபையில் ஆளுநர் உரையை நீக்கி உள்ளது.

திராவிடம்
திமுக தமிழ்நாட்டை மாநிலமாகப் பார்க்காமல் தனி தேசமாக கருதி பிரிவினைக் கருத்துகளை உருவாக்கி வருகிறது. அந்த அடிப்படையில் தான் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும், திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறி பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். மொழிவாரியமாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும் தமிழ் என்று சொல்வதைக் கூட தவிர்த்து திராவிடம் என்று பெயரில் திமுக இயங்கியது.

ராமர் பாலம்
இந்தியாவின் பெயர் பாரதம். மகாபாரதம், ராமாயணம் என பல வரலாறுகள் உண்டு. திமுகவை அனைத்தையும் கற்பனை என்று நினைத்து வருகிறது. பூகோள ரீதியாக இமயமலை கடலுக்குள்ளும், குமரி முனை மேலே இருந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இமயமலை மேலே கீழேயும் தாழ்ந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மிகப்பெரிய ஆலயங்களை கட்டியவர்களால் இரு தேசங்களுக்கும் இடையே பாலம் கட்டியிருக்க முடியாதா?

பட்டி தொட்டி எல்லாம்
ராமர் பாலம் என்பது நமது கலாச்சார அடையாளம். 1964இல் தனுஷ்கோடி நீருக்குள் மூழ்கியது அனைவரும் அறிந்ததே. எனவே சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டு விட்டு இந்தியாவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். கிராமங்களில் சாலைகள் போட வேண்டும். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முதலில் நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதேபோல் பட்டி தொட்டி எல்லாம் கஞ்சா பரவி இருக்கிறது.

யாரை காப்பாற்ற
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது மனித உரிமை மீறல். தமிழ்நாட்டில் இவ்வாறு நடப்பது எந்த விதத்தில் நியாயம்? இதில் யார் குற்றவாளி என்று கண்டுபிடிப்பதற்கு இவ்வளவு நாட்களாக ஏன் தயக்கம்? என்று தெரியவில்லை. யாரை காப்பாற்ற மறைக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது" என கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications