8 வருஷமா! 2 மாசமானு சாய்ஸ் வந்தது! தாலியை அடகு வைத்து நாகர்கோவில் போனேன்! குன்றத்தூர் அபிராமி பகீர்
சென்னை: கள்ளக்காதலன் சுந்தரத்துடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்துவதற்காகக் குழந்தைகளைக் கொன்றுவிட்டு வெளியூர் செல்ல முடிவு எடுத்தபோது, பணம் இல்லாததால் தாலியை அடகு வைத்து பணம் பெற்றதாகக் குன்றத்தூர் அபிராமி வாக்குமூலம் அளித்திருந்தார். அந்தப் பணத்தை வைத்து நாகர்கோவில் சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கள்ளக்காதலுக்காகக் குழந்தைகளைக் கொன்ற அபிராமி, கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி நாகர்கோவிலில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது அவர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

"8 ஆண்டுகளுக்கு முன்பு நானும் விஜய்யும் காதலித்துத் திருமணம் செய்தோம். எங்களுக்கு இரு குழந்தைகள். அவ்வப்போது குடும்பத்தோடு பிரியாணிக் கடைக்குச் சென்று வந்தோம். அப்போது அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அடிக்கடி பிரியாணி வாங்கச் சென்றதால் எனக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
சுந்தரமும் திருமணமானவர். எனினும் நானும் அவரும் சேர்ந்து வாழ எங்கள் குடும்பங்களை உதறிவிட்டுச் செல்ல நினைத்தோம். இதற்குச் சுந்தரமும் உடன்பட்டார். இதனால் குழந்தைகளைக் கொலை செய்ய 10 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறி சுந்தரம் தங்கியிருந்த வீட்டில் தங்கினேன்.
இதையறிந்த விஜய் என்னிடம் தகராறு செய்தார். பின்னர் என் குழந்தைகளைக் காட்டி என்னை அங்கிருந்து அழைத்து வந்தனர். விஜய்யுடன் 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய போதிலும், இரு மாதங்களே பழகிய சுந்தரத்துடன் குடும்பம் நடத்தும் போது அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இதனால் அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலை வந்தது.
இதனால், கணவர், குழந்தைகளைக் கொன்றுவிட்டுச் சந்தோஷமாக வாழலாம் எனச் சுந்தரம் யோசனை கொடுத்தார். அதைக் கேட்டு எனக்கு இதுதான் நல்ல யோசனை எனத் தோன்றியது. இதையடுத்து, ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு மூன்று பேருக்கும் பாலில் மாத்திரைகளைக் கலந்து கொடுத்தேன்.
மறுநாள் காலை மூவரும் எழுந்திருக்க மாட்டார்கள், எப்படியாவது சுந்தரத்துடன் போய்விடலாம் என மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் விஜய்யும் அஜய்யும் எழுந்துவிட்டனர். ஆனால் மகள் கார்னிகா எழுந்திருக்கவில்லை. அதனால் அவள் 30ஆம் தேதி இரவே இறந்திருப்பாள் என கருதுகிறேன்.
31ஆம் தேதி காலை விஜய் வேலைக்குச் செல்வதற்காகக் கார்னிகாவுக்கு முத்தம் கொடுக்கச் சென்றார். அவர் சென்றால், குழந்தை இறந்தது தெரிந்துவிடுமே என்பதால், குழந்தை அசந்து தூங்கிக் கொண்டிருப்பதால் அவளுக்கு முத்தம் கொடுக்க வேண்டாம் என்றேன். விஜய்யும் இதைக் கேட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு விஜய் வீட்டுக்கு வரவில்லை. அன்றைய தினம் அஜய்க்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தேன். அவன் மயங்கிவிட்டான், பிறகு அவன் கழுத்தை நெரித்துக் கொன்றேன். இரு குழந்தைகளையும் கிடத்திவிட்டு வெளியூருக்குச் செல்ல முடிவு செய்தேன்.
இருவரையும் கொன்ற விஷயத்தைச் சுந்தரத்திடம் சொன்னேன். பிறகு வெளியூர் செல்ல என்னிடம் பணம் இல்லாததால் எனது தங்கத் தாலியை அடகு வைத்து பணத்தைப் பெற்றேன். அதை எடுத்துக்கொண்டு நாகர்கோவில் சென்றேன்." இவ்வாறு அபிராமி வாக்குமூலம் கொடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications