பரந்தூர் விமான நிலைய திட்டம்.. சொல்வது ஒன்று.. செய்வது ஒன்றா?.. தமிழக அரசை சாடிய எஸ்டிபிஐ
சென்னை: விவசாய விளைநிலங்களை மக்களின் ஒப்புதலின்றி கையகப்படுத்த மாட்டோம் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, மறுபுறம் விளைநிலங்களை அழித்து விமான நிலையங்களும், சிப்காட்களும் அமைக்கும் இரட்டை நிலையை பின்பற்றி வருவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று எஸ்.டி.பி.ஐ. விமர்சித்துள்ளது.
சென்னை விமான நிலையம் போல காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், அதனை சுற்றிய 20 கிராமங்களில் சுமார் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகனாபுரத்தில் இந்தப் போராட்டம் நாள்தோறும் நடைபெறுகிறது. இதேபோல பரந்தூர் சுற்று வட்டார கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், தமிழக அரசு பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பரந்தூரை சுற்றிய 20 கிராமங்களில் 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ19.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பரந்தூர் சுற்றுவட்டார விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்: மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மக்களின் ஒப்புதலின்றி குடியிருப்புகள், விளைநிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், விமான நிலையம் அமைப்பதற்காக, 20 கிராமங்களை சேர்ந்த குடியிருப்புகள், விளைநிலங்கள், நீர்நிலைகள் அடங்கிய சுமார் 5746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இரட்டை நிலை: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அறவழியில் போராடி வந்த மக்களின் குரல்களை செவிமடுக்காமலும், திட்டத்தால் அந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை கூட இன்னும் வெளியாகாத நிலையிலும், அவசர கதியில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக அரசின் நடவடிக்கை ஏற்புடையதல்ல.
ஒருபக்கம் விவசாய விளைநிலங்களை மக்களின் ஒப்புதலின்றி கையகப்படுத்த மாட்டோம் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, மறுபுறம் வாக்குறுதிக்கு மாறாக, வளர்ச்சித்திட்டம் என்கிற பெயரைச் சொல்லி விளைநிலங்களை அழித்து விமான நிலையங்களும், சிப்காட்களும் அமைக்கும் இரட்டை நிலையை இந்த அரசு பின்பற்றி வருவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
திரும்பப் பெற வேண்டும்: தமிழகம் முழுவதும் விவசாய பணிகள் நடைபெறாத பல ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் காலியாக உள்ள நிலையில், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விளைநிலங்களை மட்டும் குறிவைத்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கையை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்.
மக்களின் உணர்வுகளை மதித்து, பரந்தூரில் குடியிருப்புவாசிகள், விவசாயிகளின் ஒப்புதலின்றி, நிலத்தை கையகப்படுத்தும் அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும். விமான நிலையத்திற்கு மாற்றுத் திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications