அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 23ல் ஆஜராகாவிட்டால் குற்றச்சாட்டு பதிவு! நீதிபதி எச்சரிக்கை
சென்னை: தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா இருவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது.
தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மா.சுப்பிரமணியனும் காஞ்சனாவும் நேரில் ஆஜராகவில்லை. அமைச்சரவை கூட்டம் நடப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி மா.சுப்பிரமணியன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி ஜெயவேல் இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அவரது மனைவி காஞ்சனாவும் மே 6 ஆம் தேதியான இன்று ஆஜராக வேண்டும் என அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட மா.சுப்பிரமணியம், காஞ்சனா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து மே 23 ஆம் தேதி வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் மே 23 ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications