நில பட்டா.. ஈரோட்டில் பட்டியல் இனத்தவர் நிலம் தாரை வார்ப்பு? சென்னை ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு
சென்னை: பட்டியலின சமுதாயத்தினர் தொழில் துவங்குவதற்காக, ஈரோட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில், தனியார் நிறுவனங்கள் கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க மனு கோரப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் கவுதம சித்தார்த்தன்.. இவர் தேசிய எஸ்.சி., - எஸ்.டி., கவுன்சில் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

பெருந்துறை: அந்த மனுவில், "ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள ஈங்கூர் தொழில் வளர்ச்சி மையத்தில், பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பின்னலாடை தொழிற்சாலைகள் அமைக்க, தாட்கோ என்ற, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு தொழில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடமிருந்து 150.35 ஏக்கர் நிலத்தை, 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வாங்கியது. இதற்கென, 1995ல் 203 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
தாட்கோவிடம், 2003ல் ஒப்படைக்கப்பட்ட இந்த நிலத்தில், 200 கொட்டகைகள், ஆழ்துளை கிணறு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பின், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலத்தில் எந்த தொழில் நிறுவனங்களும் துவக்கப்படாததால், அந்த நிலத்திலுள்ள கட்டுமானங்கள் சேதமடைந்து விட்டன.
சிப்காட்: மொத்தமுள்ள, 150.35 ஏக்கர் நிலத்தில், 48.78 ஏக்கர் நிலத்தை, 2021ல் திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 3 தனியார் நிறுவனங்களுக்கு, சிப்காட் என்ற தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகம் ஒதுக்கீடு செய்தது. நில ஒதுக்கீடு தொடர்பாக, எவ்விதமான பொது அறிவிப்பும் வெளியிடாமல், தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்தது தன்னிச்சையானது.
இந்த விவகாரத்தில், கடந்தாண்டு நீதிமன்ற பிறப்பித்த உத்தரவையும், இந்த நிறுவனங்கள் பின்பற்றவில்லை. அதனால் இந்த நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரவு: இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி அடங்கிய அமர்வு, 4 வாரங்களில் இதற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள, இது தொடர்பான விசாரணையையும் ஒத்திவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications