நிலத்தின் மதிப்பு எகிறுது.. பத்திரப்பதிவு வருவாய் அதிகரிக்க காரணமே இதுதான்! உடைத்து சொன்ன தமிழக அரசு
சென்னை: வழிகாட்டி மதிப்பு என்பது தமிழக அரசு நிர்ணயிக்கும் ஒரு சொத்தின் குறைந்தபட்ச மதிப்பு ஆகும். இது, சொத்தை பதிவு செய்யும்போது பயன்படுத்தப்படும் ஒரு தரவு ஆகும். இந்த வழிகாட்டி மதிப்பை உயர்த்தக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் வலுவாகி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில் மிக முக்கிய தகவல் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அத்துடன், வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் அமைச்சர் சட்டப்பேரவையில் விளக்கம் தந்துள்ளார்.
தமிழகத்தில், வீடு, மனைகள் தொடர்பான பத்திரங்கள், வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன.. இப்படி சொத்துக்களை பதிவு செய்யும்போது, வழிகாட்டி மதிப்பை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன.

அதாவது, இவற்றுள் நிலத்திற்கான மதிப்பு பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்... அதேபோல, நிலத்தின் சந்தை மதிப்பு சமீபகாலமாகவே பல மடங்கு உயர்ந்துள்ளது.
நிலத்தின் மதிப்பில், 50 சதவீதம் தான் அரசின் வழிகாட்டி மதிப்பாக உள்ளது. எனவே, சந்தை மதிப்பின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்த வேண்டும் என்றும், பதிவுக் கட்டணத்தினை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
வழிகாட்டி மதிப்பு அதிகரிக்க காரணம்?
இப்படிப்பட்ட சூழலில், வழிகாட்டி மதிப்பு அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.. பதிவு கட்டண வருவாய் அதிகரிப்புக்கு, நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததே காரணம் என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார்.
நேற்றைய தினம் சட்டசபையில் பல முக்கிய விவாதங்கள் நடந்தன.. அதில், அதிமுக உறுப்பினர் சுந்தரராஜன் பேசும்போது, திமுக ஆட்சியில், வழிகாட்டி மதிப்பு, பதிவு கட்டண உயர்வால், பத்திரப்பதிவு வருவாய் அதிகரித்துள்ளது. 2024-25ல் மட்டும் பத்திரப்பதிவு வாயிலாக, 21,968 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. வியர்வை சிந்தும் உழைப்பாளர்களிடமிருந்து அரசுக்கு இந்த வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
பத்திரப்பதிவு
உடனே அமைச்சர் மூர்த்தி பேசும்போது, "கடந்த 2011 முதல் 2021 வரையிலான, 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், பத்திரப்பதிவு வாயிலாக, 88,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
ஆனால், இந்த 4 வருட கால திமுக ஆட்சியில், 72,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டையும் சேர்த்து, 98,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.. மேலும், அதிமுக ஆட்சியில், 2012ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 2017 வரை நடைமுறையில் இருந்தது. அதைத்தான் இப்போது நாங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளோம்.
நிலத்தின் சந்தை மதிப்பு உயர்வு
அந்தவகையில், நிலத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. நிலத்தின் மதிப்பில், 50 சதவீதம் தான் அரசின் வழிகாட்டி மதிப்பாக உள்ளது. நிலத்தின் மதிப்பு உயர்வால்தான், பத்திரப்பதிவு கட்டண வருவாயும் அதிகரித்திருக்கிறது.. எனினும், ஒரு சில இடங்களில் வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால், அதற்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டி வாயிலாக ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் தீர்வு காணப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications