நீதிமன்றத்தில் நடந்த கொடூரத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்! சென்னை ஐகோர்ட் அருகே சாலை மறியல்
சென்னை: ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில், வட்டாட்சியர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்தப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பொதுமக்கள், போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கண்ணன் என்கிற வழக்கறிஞரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஜே எம் 2-ல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதனையடுத்து வெட்டுக் காயங்களுடன் இருந்த வழக்கறிஞர் கண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில், வழக்கறிஞர் கண்ணனை வெட்டியது, ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி செய்து வந்த ஆனந்தன் என்பதும், இவரது மனைவியும் வழக்கறிஞராக பணி செய்து வருவதும் தெரியவந்தது. கண்ணனுக்கும், ஆனந்தனுக்கும் ஏற்கெனவே இருந்த முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, வழக்கறிஞர் கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒசூரில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பூவிருந்தவல்லியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்ட குற்றவியல் சங்க வழக்கறிஞர்கள் இன்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை, நாகர்கோவில், பொள்ளாச்சி என பல்வேறு இடங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். வழக்கறிஞர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்.எஸ்.சி போஸ் சாலையில் அமர்ந்து வழக்கறிஞர்கள் மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications