விஜயகாந்த் மாதிரி விஜய் தனித்து நிற்கட்டும்? அதுதான் சரி! : புதிய ரூட்டில் சீமான்
சென்னை: விஜய் ஒருபக்கம் திராவிடத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு மறுபுறம் திமுகவை எதிர்க்கிறேன் என்பது பெரிய குழப்பமாக இருக்கிறது என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தனது முதல் கொள்கைத் திருவிழா மாநாட்டை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் மிகப்பிரம்மாண்டமாக நேற்று நடத்திக் காட்டி இருக்கிறார். கிட்டத்தட்ட இந்த மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அவரது தொண்டர்கள் வி.சாலையை நோக்கிப் படையெடுத்ததால், சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 20கிமீட்டர் தூரம் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநாட்டில் விஜய்யை தவிர வேறு எந்தப் பேச்சாளர்களும் இடம்பெற்று நீண்ட உரையாற்றவில்லை. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்கூட வரவேற்புரை என்பதுடன் நிறுத்திக் கொண்டார். ரசிகர் மன்றத்தில் உள்ள தங்களுக்கு ஒரு அரசியல் அங்கிகாரம் வழங்கியதற்காக விஜய்க்கு அவர் நன்றி சொன்னார்.

இந்த மாநாட்டில் கட்சிக் கொள்கை மற்றும் கொடியின் விளக்கத்தை விஜய் அறிவிக்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், அதைக்கூடக் கட்சி நிர்வாகிகளை வைத்து வாசிக்கச் சொன்னார். ஏறக்குறைய ஒரு திரைப்பட பாணியிலான மாநாடு போல நடைபெற்றது. விஜய் அறிவித்த அவரது கட்சியின் கொள்கைகள் பாதி திமுகவின் முழக்கமாக இருந்தது. ஆனால், திமுகதான் அரசியல் எதிரி என்று அவர் தெரிவித்திருந்தார். திராவிட மாதிரியை விமர்சித்த விஜய், பாஜக என்று பெயரையே சொல்லவில்லை. பாஜகவை திமுக பாசிசம் என்று சொல்கிறது. அப்படி என்றால் நீங்கள் பாயாசமா? என பஞ்ச் டயலாக் பேசினார் விஜய். ஆனால், பாஜக, மோடி என்ற வார்த்தைகளை உச்சரிக்கவே இல்லை.
மேலும் திராவிடத்தையும் தேசியத்தையும் இரண்டு கண்களாகப் பார்ப்பேன் என்று விஜய் கூறியிருந்தார். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடு இல்லை என்றும் அண்ணாதுரையின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பாதையில் பயணிப்போம் என்றும் அவர் பேசி இருந்தார். அது பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். விஜய் கட்சியின் கொள்கையில் குழப்பம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சீமான் பேசுகையில், "இது சரியான கொள்கை முடிவாக நான் பார்க்கவில்லை. குழப்பமான முடிவுதான். பெ.மணியரசன், 'ஒன்று சாம்பார் எனச் சொல்ல வேண்டும். இல்லை எனில் கருவாட்டுக் குழம்பு என்று சொல்ல வேண்டும். கருவாட்டுச் சாம்பார் என்று சொல்லக்கூடாது' என்பார். அதைத்தான் நான் இதற்கு உதாரணமாகச் சொல்ல நினைக்கிறேன். திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று கிடையாது. ஒன்றாகவே இருக்க முடியாது.
இங்கே உள்ள நிலம் தமிழர்களின் தேசம். தமிழர்களின் தாயகம். இங்கே உள்ள இனம், மொழி, கலை, பண்பாடு,வழிபாடு எல்லாம் வேறு. அதை முன்வைப்பதுதான் தமிழ்த் தேச அரசியல். நாங்கள் தமிழ்த் தேசம் என்று பேசுவது பாசிசம் என்றால், நாங்கள் பிறப்பதற்கு முன்பே தெலுங்கு தேசம் என்று என்.டி.ராமராவ் அவரது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளார். அது இப்போது ஆட்சியில் இருக்கிறது. என்னை இனவாதி, பாசிஸ்ட் என்று பாஜக சொல்கிறது. ஆனால், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அது பாசிசம் இல்லையா?
பாரத நாடே பைந்தமிழர் நாடு என்று நான் சொல்லவில்லை. அம்பேத்கரே சொல்லி இருக்கிறார். அவ்வளவு பெரிய நிலத்தில் வாழ்ந்தவர்கள் நாங்கள். அதைவிட்டு சின்ன நிலத்தில் வாழ்கிறோம். அதையும் விட்டுவிட்டு எங்கே போய் நாங்கள் நிற்பது? அதில் ஏன் திராவிடத்தைப் புகுத்துகிறீர்கள்? திராவிடம் என்ற சொல்லே தமிழ் கிடையாது. எனவேதான் தமிழ்த் தாய் வாழ்த்தில் திராவிடத்தை உயர்த்தி பிடிக்கும்போது நாங்கள் சண்டை போடுகிறோம். திராவிடம் என்பது எங்களை அடக்கி ஆள்வது. தமிழ்த் தேசம் என்பது மற்ற மொழியினர் போல நாங்களும் சமமாக ஆளவேண்டும் என்பது. இரண்டுக்கும் வேறுபாடு இதுதான்.
அது வேடிக்கையான விசயம். விஜயகாந்த் தலைமையை ஏற்று திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் போய் கூட்டணி வைத்துப் போட்டியிட்டனர். இவர்கள் யாரும் எடுத்தவுடனேயே கூட்டணி அமைக்கவில்லை. சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களைத் தனித்துப் போட்டியிட்டு, பலத்தை நிரூபித்துவிட்டு கூட்டணிக்குப் போனார்கள். விஜயகாந்த் தனது 10% மேல் வாக்கு வங்கி இருக்கிறது என்பதை நிரூபித்த பின், ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து 20 இடங்களுக்கு மேல் வென்று எதிர்க்கட்சி தலைவராக நாற்காலியில் அமர்ந்தார்.
முதலில் விஜய் தனக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும். அதன்பின் கூட்டணிக்கு அவர் பின்னால் போகலாம். எங்கள் கட்சி 8% வாக்குகளை வைத்துள்ளது. நானே யாரையும் கூட்டணிக்குக் கூப்பிடவில்லையே? திராவிடத்தை ஆதரித்துக் கொண்டு, திமுகவை எதிர்ப்பதை நான் சரியான அணுகுமுறையாகப் பார்க்கவில்லை.
அரசியல் எதிரி திமுக என்கிறார். நான் பல ஆண்டுகளாக திமுக எங்கள் எதிரி எனச் சொல்லி வருகிறேன். எனக்கு இந்த நாட்டில் உள்ள ஒரே நச்சு மரம் திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதை வேருடன் வெட்டிச் சாய்க்காமல் ஓயமாட்டோம். அந்தக் கட்சி இருக்கும் வரை நல்லாட்சி மலராது. எனவே விஜய் திமுகவை எதிரி என்று சொல்வதை ஆதரிக்கிறேன்.
ஆனால், கூட்டணி சேர்வதில் சிக்கல் உள்ளது. திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள் என்கிறார் விஜய். எனக்கு இரண்டு கண்களும் தமிழ்த் தேசியம் தான். எனவே கொள்கை முரண் இருக்கிறது. நாங்கள் தமிழ் மக்கள் முன்னுரிமையைத் தூக்கிப் பிடிக்கிறோம். அவர் நிலைப்பாட்டில் குழப்பம் உள்ளது" என்கிறார்.












Click it and Unblock the Notifications