சென்னையில் திடீரென வெளுத்து வாங்கும் மழை.. ஜில் கிளைமேட்டால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளான சென்ட்ரல் எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது. நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்ப மழை பெய்ய தொடங்கியுள்ளதால், சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

சென்னையின் முக்கிய பகுதிகளான சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோவை, நெல்லை மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் வெதர்மேன் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், நேற்று மிஸ் பண்ணினேன். ஆனால் இன்று இரவு சென்னை, தென் சென்னை, தாம்பரம், ஓஎம்ஆர், ஈசிஆர், சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மழை பெய்ய தொடங்கி இருப்பதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து வெயில் அதிகரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கி இருப்பது சென்னை மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications