முதல் மழை நனைத்ததே.. புத்தாண்டில் குளிரப் போகும் மாவட்டங்கள்! இந்த மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை!
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதி பகுதியில் மாண்டஸ் புயல், மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது.

பனிப்பொழிவு
பொதுவாகவே தை மாதம் என்றாலே கடுமையான பனிப்பொழிவு இருக்கும் நிலையில் மழைக்கான வாய்ப்பு இருக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் இன்று தொடங்கி ஏழாம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வறண்ட வானிலை
04.01.2023 மற்றும் 05.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 06.01.2023 மற்றும் 07.01.2023 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு பதிவாகாத நிலையில், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications