6863 நாட்கள்; 40 வருடங்கள்; 41 அரசு நிறுவனங்கள்... தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்!
சென்னை: தமிழ்நாடு அரசு 'கலைஞர் 100' விழாவைப் பலகோணங்களில் கொண்டாடி வருகிறது. இப்போதுதான் கன்னியாகுமரியிலிருந்து 'முத்தமிழ்த் தேர்' புறப்பட்டு ஊர் ஊராக முன்னாள் முதல்வரின் எழுத்துலக சாதனையைப் பரப்பி வருகிறது.
அதற்குள் அடுத்த விழா ஆரம்பமாகிவிட்டது. 'நிறுவனங்களின் நாயகர்- கலைஞர்' சிறப்புப் புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சென்னையில் தொடங்கி உள்ளது.

உள்ளே சென்று பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. அந்தளவுக்கு அடுக்கடுக்கான சாதனைகள். இத்தனை நிறுவனங்களை ஒரே ஒரு முதலமைச்சர் உருவாக்கியதா? அப்படி என்றால்? மற்ற முதலமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி மனதை அழுத்துகிறது. அந்தளவுக்குத் தமிழ்நாட்டின் உயர்வுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி உழைத்திருக்கிறார். அது உண்மை.
இந்த விழா குறித்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன், "சம அளவில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த சிப்கோ, சிஃப்காட் நிறுவனங்களைத் தொடங்கினார். அதைப் போல நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தைக் கொண்டுவந்ததும் அவர்தான். குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கியதும் கலைஞர்தான்.

இப்படிப் பல நிறுவனங்களை அவர் உருவாக்கினார். அதைத்தான் நாங்கள் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அந்தப் பட்டியலைப் பார்த்தால், இவ்வளவு நிறுவனங்களை உருவாக்கியவர் கலைஞர்தானா என்று ஆச்சரியப்பட்டுவிடுவீர்கள்.
தமிழ்நாடு வளர்ச்சியடைய அவர் என்னென்ன நிறுவனங்களைத் தொடங்கி இருக்கிறார் என்ற தகவலை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும். அதுதான் இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கம்" என்கிறார்.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, "நாட்டில் யார் யாரோ என்னென்ன மாடல்களையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாடல் என்பது அது கலைஞர் உருவாக்கிய 'திராவிட மாடல்'தான்" என்று அழுத்தம் திருத்தமாக அவரது கருத்தைப் பதியவைத்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள அழைப்பிதழே மிக அழகாக இருக்கிறது. அதை உதயநிதியும் குறிப்பிட்டுச் சொன்னார். அழைப்பிதழில் கலைஞர் கருணாநிதி உருவாக்கிய நிறுவனங்களை அப்படியே அச்சு அசல் புடைப்புச் சிற்பங்களைப் போல அச்சடித்திருக்கிறார்கள். ஏறக்குறைய 3டி மாடல் அழைப்பிதழ் என இதைச் சொல்லலாம்.
1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தை மு.கருணாநிதி தொடங்கினார். அன்று முதல் ஏறக்குறைய 40 ஆண்டுகளில் அவரால் 41 அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அவர் ஆட்சியிலிருந்த காலகட்டத்தில் குறைந்தது 2 புதிய அரசு நிறுவனங்களை அவர் தொடங்கி இருக்கிறார். அதில் பல நிறுவனங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்துள்ளன.

அம்பத்தூரில் சிப்கோ தொடங்கப்பட்டது. மதுரையில் உள்ள மடீட்சியாவை தொடங்கிய பெருமையும் இவரையே சேரும். அது என்ன மடீட்சியா என்கிறீர்களா? Madurai District Tiny & Small Scale Industries Association சுருக்கம்தான் அது.
இந்தியாவிலேயே சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு என்று தனித்தன்மையாக ஒரு கொள்கையை முதன்முதலாக வடித்துக் காட்டியவர் மு.கருணாநிதிதான். இந்தக் கொள்கையைப் பின்பற்றித்தான் 2021 ஆம் ஆண்டு புதிய கொள்கை வெளியிடப்பட்டது என்பது பலரும் அறியாத செய்தி.
இன்று கிண்டியைத் தாண்டிச் செல்லும் பலரும் TIDCO நிறுவனத்தைக் காணலாம். அதாவது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தைத்தான் குறிப்பிடுகிறோம். அதுவும் இவரால் திறக்கப்பட்ட அரசு நிறுவனங்களில் ஒன்று. அப்படியே அதே பகுதியில் உள்ள பில்கோ கண்ணாடித் தொழிற்சாலையை இவரே அமைத்துத் தந்தார்.

"கலைஞருக்கு இரண்டு கண்கள். ஒன்று தொழில்துறை. மற்றொன்று அனைவருக்குமான சமூகநீதி. அவர் எல்லா துறைகளிலும் அனைவருக்கும் சம நீதி கிடைக்கவேண்டும் என்று விரும்பினார்.
தமிழ்நாடு இன்றைக்கு இந்திய அளவில் முதல் இடத்தில் அல்லது 2வது இடத்தில் இருப்பதற்கு அவர்தான் காரணம். கல்வி, மருத்துவம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் என்று எதை எடுத்துக் கொண்டாலும், அதை எல்லாம் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்தவர் கலைஞர்தான். அவர் 5 முறை முதல்வராக இருந்தார். 6863 நாள்கள் முதலமைச்சராக இருந்திருக்கிறார்" என்கிறார் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன்.

அவரது ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அரசு நிறுவனங்களின் பட்டியல்:
#1970-ல் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
1970-ல் தமிழ்நாடு பாடநூல் கழகம்
#1970-ல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
#1971-ல் சிப்காட் மற்றும் டிட்கோ அதாவது தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்
#1971-ல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
#1971-ல் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்
##1971-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
#1972-ல் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்
#1972-ல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
#1973-ல் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் கழகம்
#1973-ல் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்
#1974-ல் தமிழ்நாடு உப்பு நிறுவனம்
#1974-ல் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்

#1974-ல் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம்
#1974-ல் தமிழ்நாடு சர்க்கரைக் கழகம்
#1974இல் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம்
#1974-ல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம்
#1974-ல் சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம்
#1989-ல் தமிழ்நாடு வணிகர் நல வாரியம்
#1990-ல் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்
#1996-ல் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம்
#1997-ல் தமிழ்நாடு கடல்சார் வாரியம்
#1998-ல் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம்

#1999-ல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
#1999-ல் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
#2000-ல் தமிழ் இணையக் கல்விக் கழகம்
#2001-ல் தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்
#2007-ல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்
#2007-ல் சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்
#2009-ல் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவை மட்டுமல்லாமல்,

#தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
#மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
#தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
#டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
#தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

#பெரியார் பல்கலைக்கழகம் எனப் பல உருவாக்கி தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு சென்றவர் கலைஞர் மு.கருணாநிதி. ஆகவேதான் 'நிறுவனங்களின் நாயகர்' என்று அவரை இந்த நூற்றாண்டு வேளையில் தமிழ்நாடு அரசு கொண்டாடி விழா எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications